தூத்துக்குடியில் பருவ மழைக்கு முன்பு வடிகால் பணிகள் விரைந்து முடிக்கப்படுமா?
தூத்துக்குடியில் பருவ மழைக்கு முன்பு வடிகால் பணிகள் விரைந்து முடிக்கப்படுமா? என பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தூத்துக்குடியில், பருவமழைக்கு முன்பு மழைநீர் வடிகால் பணிகள் விரைந்து முடிக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
பருவமழை
பருவமழை தொடங்கினால் ஒரு தரப்பினருக்கு மகிழ்ச்சியும், ஒரு தரப்பினருக்கு அச்சத்தையும் உருவாக்கி வருகிறது.
ஆம்.. விவசாயிகள் தொழிலை மகிழ்ச்சியுடன் தொடங்கி விடுவார்கள். அதே நேரத்தில் மழை வெள்ளம் வீடுகளை சூழ்ந்து விடும் என்று பலர் அச்சத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இவர்களின் அச்சத்தை போக்கி மழையை அனைத்து தரப்பினரும் வரவேற்கும் நிலையை அரசு உருவாக்க வேண்டும், என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது.
மழைநீர் தேங்கும் இடங்கள்
தூத்துக்குடி மாவட்டத்தில், தூத்துக்குடி தாலுகாவில் 15 இடங்களும், ஸ்ரீவைகுண்டத்தில் 4 இடங்களும், திருச்செந்தூரில் 3 இடங்களும், சாத்தான்குளத்தில் 3 இடங்களும், ஏரலில் 5 இடங்களும், கோவில்பட்டியில் 2 இடங்களும், ஓட்டப்பிடாரத்தில் ஒரு இடமும், கயத்தாறில் 2 இடங்களும், விளாத்திகுளத்தில் ஒரு இடமும் ஆக மொத்தம் 36 இடங்கள் மழைநீர் தேங்கும் இடங்களாக கண்டறியப்பட்டு உள்ளன.
அதன்படி சங்கரப்பேரி, மீளவிட்டான் (மடத்தூர், தபால் தந்தி காலனி), முத்தம்மாள் காலனி, ஆதிபராசக்தி நகர், குறிஞ்சி நகர், திரு.வி.க. நகர், கோயில்பிள்ளை நகர், அத்திமரப்பட்டி (வீரநாயக்கன்தட்டு), ஆபிரகாம் நகர், காலாங்கரை, முள்ளக்காடு ஜெ.எஸ்.நகர், தூத்துக்குடி ராஜீவ்நகர், கந்தன் காலனி, கதிர்வேல் நகர், ஸ்டேட் வங்கி காலனி, புன்னக்காயல், ஏரல் சிவராமமங்கலம், கொங்கராயகுறிச்சி, ஸ்ரீபராங்குசநல்லூர், காயல்பட்டினம், ஆத்தூர், திருக்களூர், முக்காணி, திருப்பணி புத்தன்தருவை, வாலசமுத்திரம், முத்தாலங்குறிச்சி, அகரம், இலுப்பையூரணி, காந்திநகர், அங்கமங்கலம், ஆழ்வார்திருநகரி வடம்போக்கி தெரு, கோமநேரி, வைரகுளம், கடம்பூர் தங்கம்மாள்புரம், சன்னது புதுக்குடி, வைப்பார் ஆகிய இடங்கள் கடந்த காலங்களில் மழைநீர் தேங்கும் பகுதியாகவும், வெள்ளநீர் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தும் பகுதியாகவும் அடையாளம் காணப்பட்டு உள்ளது.
விரைந்து முடிக்கப்படுமா?
இந்த பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனவே பருவமழைக்கு முன்பு மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
விடிவுகாலம்
இதுகுறித்து தூத்துக்குடி முத்தம்மாள் காலனி 3-வது தெருவை சேர்ந்த பி.துரைமுருகன் கூறும்போது, தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட முத்தம்மாள் காலனி பகுதியில் ஒவ்வொரு மழை காலமும் வேதனையான நாட்களாக அமைந்து இருந்தது. மாடன்குளம் தண்ணீர் மற்றும் காட்டாற்று வெள்ளம் ஊருக்குள் வருவதால் மழைநீர் இரண்டு அடி வரை தேங்கி நிற்கும். இதனால் மிகவும் அவதிப்பட்டு வந்தோம்.
கடந்த ஆண்டு மழைவெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்-அமைச்சர் நேரில் பார்வையிட்டார். இதனை தொடர்ந்து இந்த பகுதிகளில் மழைநீர் தேங்காமல் தடுப்பதற்கான பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக மாடன்குளம் தண்ணீர் ஊருக்குள் வராமல் தடுக்கவும், காட்டாற்று வெள்ளத்தை வேறு பகுதிக்கு திருப்பி விடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதே போன்று ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் இன்னும் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ளது. இதனால் ஆங்காங்கே உள்ள பம்பிங் நிலையங்கள் மூலம் தண்ணீரை பம்பிங் செய்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. மழைநீர் வடிகால் பணிகளை மழை தொடங்குவதற்கு முன்பு முடிக்க வேண்டும். பணிகள் விரைவாக, முழுமையாக முடிவடைந்தால் தான் இந்த பகுதிக்கு விடிவுகாலம் பிறக்கும், என்று கூறினார்.
மழைக்கு முன்பு..
தூத்துக்குடி அய்யாச்சாமி காலனியை சேர்ந்த அந்தோணிராஜ் கூறும்போது, மழைக்காலம் வந்து விட்டால் எங்கள் பகுதி முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கும். 15 வருடமாக இந்த பிரச்சினையை சந்தித்து வருகிறோம். இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் தற்போது மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது. பாதாள சாக்கடை திட்டமும் நடந்து வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் முழுமையாக முடிக்க வேண்டும். அதே போன்று அனைத்து பகுதிகளிலும் சாலை வசதியையும் மேம்படுத்த வேண்டும். மாநகராட்சி மேயர் இரவு நேரத்திலும் கால்வாய் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்து வருகிறார். பணிகளை வேகமாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த பணிகள் மழைக்கு முன்பு முடிந்தால் சிறப்பாக இருக்கும், என்று தெரிவித்தார்.
உப்பாற்று ஓடை
முள்ளக்காடு ஜெ.எஸ்.நகரை சேர்ந்த முத்துகிருஷ்ணன் கூறும்போது, எங்கள் ஊரின் அருகே உப்பாற்று ஓடை அமைந்து உள்ளது. இந்த ஓடையில் ஒவ்வொரு மழைக்காலத்திலும் கரை உடைந்து வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து வருகிறது. இந்த தண்ணீர் ஜெ.எஸ்.நகருக்குள் புகுந்து மார்பளவுக்கு தேங்கி விடுகிறது. இதனால் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். உப்பாற்று ஓடையின் கரையை சீரமைக்க வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் கோரிக்கை விடுத்து வருகிறோம். இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. ஆனாலும் முழுமையாக முடிக்கப்படவில்லை. இன்னும் பணிகள் நிறைவடையாமல் பாதியிலேயே நிற்கிறது. வழக்கமாக உடைப்பு ஏற்படும் ஒரு இடத்தையும் அடையாளம் கண்டு உள்ளோம். அந்த பகுதியிலும் கரையை பலப்படுத்தும் பணிகள் நடைபெறவில்லை. ஆகையால் விரைந்து கரையை பலப்படுத்தி ஊருக்குள் தண்ணீர் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊருக்குள் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி தொடங்க உள்ளது. இதற்காக ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர், என்று கூறினார்.
வடிகால் வசதி
தூத்துக்குடியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் கூறும்போது, முள்ளக்காடு பகுதிக்கு வரும் தண்ணீரை வெளியேற்றுவதற்கான வடிகால் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. உப்பாற்று ஓடையில் உடைப்பு ஏற்படும் பகுதிகளை முழுமையாக பலப்படுத்த வேண்டும். ஓடையின் உட்புறத்தில் உள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும். அதே போன்று ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும். அப்போதுதான் தண்ணீர் வேகமாக கடலுக்கு செல்லும். இதனால் கரை உடைக்காமல் செல்லும். அதே போன்று ஊருக்குள் வரும் தண்ணீரை வெளியேற்றுவதற்காக ஒரு வடிகால் உள்ளது. அந்த வடிகால் தண்ணீரை வெளியேற்றுவதற்கான ஒரு வாய்ப்பாக உள்ளது, என்று கூறினார்.
அதிகாரிகள் தகவல்
இதுபற்றி அதிகாரிகள் கூறியதாவது:-
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதே போன்று ஆற்றங்கரையை ஒட்டி உள்ள பகுதிகளில் மழை வெள்ளம் உட்புகாமல் தடுப்பதற்காக மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
இந்தநிலையில், ஆங்காங்கே ஆற்றங்கரைகளும் பலப்படுத்தப்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகாமல் இருப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. பேரிடர் மேலாண்மை திட்டத்தின் கீழ் முன் கள பணியாளர்களுக்கு மீட்பு பயிற்சிகளும் அளிக்கப்பட்டு உள்ளன. அதற்கு தேவையான உபகரணங்களும் வழங்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
மக்கள் பாதிக்கப்பட்டால் பாதுகாப்பாக வைப்பதற்காக தங்குமிடங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
--------------