பஸ் நிலைய நுழைவாயிலில் ஆக்கிரமிப்புகள் நிரந்தரமாக அகற்றப்படுமா?


பஸ் நிலைய நுழைவாயிலில் ஆக்கிரமிப்புகள் நிரந்தரமாக அகற்றப்படுமா?
x
தினத்தந்தி 19 Feb 2023 12:15 AM IST (Updated: 19 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை பஸ் நிலைய நுழைவாயிலில் ஆக்கிரமிப்புகள் நிரந்தரமாக அகற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை பஸ் நிலைய நுழைவாயிலில் ஆக்கிரமிப்புகள் நிரந்தரமாக அகற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

பஸ் நிலையம்

மயிலாடுதுறை நகரில் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு கடந்த 25 ஆண்டுகளாக 2 பஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் சென்னை, சிதம்பரம், கும்பகோணம், பூம்புகார், மணல்மேடு ஆகிய மார்க்கங்களில் செல்லும் பஸ்கள் அனைத்தும் காமராஜர் பஸ் நிலையத்துக்கு வந்து செல்கின்றன.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த காமராஜர் பஸ் நிலையத்தின் நுழைவாயில் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பஸ் நிலையத்துக்குள் நடந்து சென்று வரவும், பஸ்கள் எளிதாக பஸ் நிலையத்திற்கு நுழைவதற்கும் சிரமம் ஏற்பட்டு வருகிறது.

மீண்டும் ஆக்கிரமிப்பு

அவ்வப்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டாலும் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகிறது. கடந்த மாதம் நகராட்சி ஊழியர்கள் பஸ் நிலைய நுழைவாயில் பகுதியில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு இருந்த கடைகளை அப்புறப்படுத்தினர். அப்போது ஆக்கிரமிப்பு அகற்றும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் ஏற்கனவே அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் கடைகள் ஆக்கிரமித்தன. இதனால் பயணிகள் பஸ் நிலையத்திற்குள் சென்று வர முடியாமல் அவதிப்படுகின்றனர்.

ஆக்கிரமிப்பு காரணமாக பயணிகள் நடந்து சென்று வரும்போது பலர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இது போன்ற விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க மயிலாடுதுறை காமராஜர் பஸ் நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

அவதிப்படும் நிலை

இதுகுறித்து மயிலாடுதுறையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் கூறியதாவது:- மயிலாடுதுறை காமராஜர் பஸ் நிலையத்தில் நுழைவாயில் பகுதியை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதே போல காமராஜர் பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் செல்லும் வண்டிக்காரத்தெரு சாலையும் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள் நடந்துகூட செல்ல முடியாமல் அவதிப்படும் அவல நிலையை போக்க ஆக்கிரமிப்புகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும்.

கண்டுகொள்வது இல்லை

சமூக ஆர்வலர் நாராயணன்:- காமராஜர் பஸ் நிலைய நுழைவாயில் பகுதியில் ஒருபுறம் கடைகள் ஆக்கிரமித்து சாலையை குறுக்கே பொருட்களை வைத்துள்ளனர். மற்றொருபுறம் மோட்டார் சைக்கிள்கள் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்டுள்ளன. அந்த பகுதியில் எப்போதும் போலீசார் இருந்தும் அதனை கண்டு கொள்வது இல்லை. எனவே பஸ் நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பஸ் நிலையத்திற்குள் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டும் மோட்டார் சைக்கிளையும் அப்புறப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story