சாலையில் தேங்கி கிடக்கும் குப்பைகள் அள்ளப்படுமா?


சாலையில் தேங்கி கிடக்கும் குப்பைகள் அள்ளப்படுமா?
x

சாலையில் தேங்கி கிடக்கும் குப்பைகள் அள்ளப்படுமா?

திருவாரூர்

பொதக்குடியில் சாலையில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குப்பைகள் தேங்கி கிடக்கிறது

கூத்தாநல்லூர் அருகே உள்ள பொதக்குடியில் உள்ள ஜலால் தெரு சாலையில் கடந்த சில நாட்களாக அதிகளவில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. சாலையோரத்தில் குவியல் குவியலாக கொட்டப்பட்ட குப்பைகள் சாலையில் அங்கும் இங்குமாக சிதறிக்கிடக்கிறது. இதனால் இந்த சாலை வழியாக பெரியபள்ளிவாசல், தர்காவில் வழிபாடு நடத்த சென்று வருவோர், கீழத்தெரு, மேலத்தெரு, அதங்குடி, விழல்கோட்டகம், வெள்ளக்குடி, பொதக்குடி கடைவீதி மற்றும் ஏனைய இடங்களுக்கு சென்று வருவோர், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களில் சென்று வருவோர் மிகவும் சிரமம் அடைகின்றனர்.

தொற்றுநோய் பரவும் அபாயம்

தேங்கி கிடக்கும் குப்பைகளில் துர்நாற்றம் வீசுவதாலும், கொசு உற்பத்தி அதிகரித்து கொசுக்கடி அதிகரித்து வருவதாலும், வீடுகளில் வசிப்போர் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். குப்பைகள் அடிக்கடி தேங்குவதால் சாலையில் சிதறும் நிலை ஏற்படுவது ஒரு புறம் இருந்தாலும், காற்று வீசும் போது குப்பைகள் பறந்து சென்று சில வீடுகளில் விழுகின்றன. குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுவதால், தொற்று நோய், சுகாதார கேடு ஏற்படும் வாய்ப்புகளும் உள்ளன.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் தேங்கி் கிடக்கும் குப்பைகளை அள்ள வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story