அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்படுமா
தியாகதுருகம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
தியாகதுருகம்
பொதுமக்கள் எதிர்பார்ப்பு
தியாகதுருகம் அருகே கூத்தக்குடி கிராமத்தில் கடந்த 2000-ம் ஆண்டு முதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு கூத்தக்குடி மட்டுமின்றி சித்தாத்தூர், குருபீடபுரம், கூந்தலூர் உள்ளிட்ட 12 கிராமங்களை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் தினமும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்து செல்கின்றனர். மேலும் இங்கு மாதம் 2 முதல் 5 பிரசவம் வரை பிரசவம் பார்க்கப்படுகிறது. புறநோயாளிகள் மட்டுமின்றி உள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 6 படுக்கை வசதிகளும் உள்ளன.
இரவு நேரங்களில் செவிலியர்கள்
ஆனால் ஆரம்ப சுகாதார நிலையமாக உள்ளதால் இங்கு காலை முதல் மாலை வரை மட்டுமே டாக்டர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். இரவு நேரங்களில் செவிலியர்கள் மட்டும் பணியில் இருப்பதால் விபத்து, விஷக்கடி போன்ற அவசர காலங்களில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டுமானால் உளுந்தூர்பேட்டை, தியாகதுருகம், கள்ளக்குறிச்சி ஆகிய நகர பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்குத்தான் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.
எனவே இப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணி நேரமும் இயங்கக்கூடிய மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேற்கூரை சிதிலம் அடைந்துள்ளது
மேலும் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டப்பட்டு சுமார் 22 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனால் பழமையான கட்டிடங்களின் மேற்கூரைகள் சிதிலம் அடைந்து காணப்படுவதால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலை உள்ளது. மழைக்காலங்களில் மேற்கூரை வழியாக மழைநீர் ஒழுகுவதாகவும் கூறப்படுகிறது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழமையான கட்டிடங்களை நேரில் ஆய்வு செய்து உடனடியாக பராமரிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம்.
பஸ்வசதி இல்லை
கூத்தக்குடி கிராமம் பொறியியல் பட்டதாரி மகேந்திரன்:-
கூத்தக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பகல் நேரங்களில் மட்டுமே டாக்டர்கள் உள்ளனர். இரவு நேரங்களில் செவிலியர்கள் மட்டுமே பணியில் இருப்பதால் விஷக்கடி, விபத்து, பிரசவம் உள்ளிட்ட பல்வேறு அவசர சிகிச்சைகளுக்கு சுமார் 18 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தியாகதுருகம், 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை ஆகிய அரசு ஆஸ்பத்திரிகளுக்கும், 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கும் தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அப்படி செல்லும் போது சிலர் வழியலேயே உயிரிழந்து விடுகின்றனர். மேலும் கூத்தக்குடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த மக்கள் இரவு நேரங்களில் செல்வதற்கு போதிய பஸ் வசதியும் இல்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி கூத்தக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் டாக்டர்கள் பணிபுரியும் வகையில் தரம் உயர்த்த வேண்டும்.
நோயாளிகள் அச்சம்
தியாகதுருகம் அருகே புது உச்சிமேடு கிராமத்தை சேர்ந்த என்ஜினீயர் பெரியசாமி:-
கூத்தக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது இந்த கட்டிடத்தின் மேற்கூரைகள் பழுதடைந்து இருப்பதால் அங்கு பணிபுரியும் பணியாளர்கள், சிகிச்சை பெறும் நோயாளிகள் எப்போது என்னவாகுமோ என்ற அச்சத்திலேயே இருக்க வேண்டிய நிலை உள்ளது. மழைக்கால்களில் மேற்கூரை வழியாக மழைநீர் உள்ளே விழுவதால் அறை முழுவதும் குளம்போல் தண்ணீர் தேங்கி விடுவதால் நோயாளிளுக்கு சிகிச்சை அளிக்க மிகவும் சிரமமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை புனரமைத்து, தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.