புதர் மண்டி கிடக்கும் சுகாதார வளாக கட்டிடம் சீரமைக்கப்படுமா?
கூத்தாநல்லூர் அருகே புதர் மண்டி கிடக்கும் சுகாதார வளாக கட்டிடம் சீரமைக்கப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் அருகே புதர் மண்டி கிடக்கும் சுகாதார வளாக கட்டிடம் சீரமைக்கப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
சுகாதார வளாகம்
கூத்தாநல்லூர் அருகே உள்ள, வெள்ளக்குடி கிராமத்தில், அப்பகுதி கிராம மக்களின் பயன்பாட்டிற்காக சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு சுகாதார வளாக கட்டிடம் கட்டப்பட்டது. இந்த சுகாதார வளாகத்தை அந்த பகுதி மக்கள் சில ஆண்டுகள் பயன்படுத்தி வந்தனர்.
தற்போது இந்த சுகாதார வளாகம் சேதமடைந்து காணப்படுகிறது. இதில் அறைகளில் சில இடங்களில் கட்டிடத்தில் விரிசல்கள் ஏற்பட்டும், அறைகளில் பொருத்தப்பட்ட கதவுகள் மற்றும் தண்ணீர் குழாய்கள் சேதமடைந்தும் உள்ளன.
காடு போல் காட்சி அளிக்கிறது
சுகாதார வளாக கட்டிடத்தை சுற்றிலும், கருவேல மரங்கள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் சுகாதார வளாக கட்டிடம் இருப்பதே தெரியாத அளவில் செடி, கொடிகள் வளர்ந்து காடுபோல் காட்சி அளிக்கிறது.
இதன் காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக சுகாதார வளாகத்தை கிராம மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காடு மேல் உள்ளதால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகளின் நடமாட்டம் அதிக அளவில் உள்ளதால், இந்த பகுதிக்கு செல்லவே கிராம மக்கள் அச்சப்படுகின்றனர்.
சீரமைக்க வேண்டும்
இந்த பகுதி மக்கள் சுகாதார வளாகத்தை பயன்படுத்த முடியாததால் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். குறிப்பாக பெண்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுகாதார வளாகத்தில் புதர் மண்டி கிடக்கும் கருவேல மரங்கள் மற்றும் செடிகளை அகற்றி விட்டு சேதமடைந்த கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.