திருச்சி மலைக்கோட்டையின் பாரம்பரியம் பாதுகாக்கப்படுமா?


திருச்சி மலைக்கோட்டையின் பாரம்பரியம் பாதுகாக்கப்படுமா?
x

திருச்சி மலைக்கோட்டையின் பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டும் என சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

திருச்சி

திருச்சி மலைக்கோட்டையின் பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டும் என சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மலைக்கோட்டை

தமிழகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள திருச்சி மாநகரத்தின் முக்கிய அடையாளமாக விளங்குவது திருச்சி மலைக்கோட்டை. தொன்மை வாய்ந்த மலைப்பாறை ஒன்றின் மீது கட்டப்பட்ட கோட்டை, கோவில்கள் ஆகியவற்றை கொண்டதாக மலைக்கோட்டை திகழ்கிறது. நடுவில் ஒரு மலையும், அதனை சுற்றி கோட்டையும் அமைந்துள்ளதால் மலைக்கோட்டை என்றழைக்கப்படுகிறது.

மலையின் அடிவாரத்தில் மாணிக்க விநாயகர் சன்னதியும், மலையின் நடுவில் தாயுமானவர் சன்னதி மற்றும் அம்மன் சன்னதி, மலையின் உச்சியில் உச்சிவிநாயகர் சன்னதி 3 சிகரங்களை கொண்டுள்ளது. ஒவ்வொரு மாதம் பவுர்ணமி நாள் மற்றும் தமிழ் மாதப்பிறப்பு நாட்களில் இந்த மலையை சுற்றி வருபவர்களுக்கு அனைத்து நலன்களும் உண்டாகும். ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்திவிழா, பங்குனி மாதம் தெப்பத்திருவிழா, சித்திரை மாதம் தேர்திருவிழா முதலியன இந்த தலத்தில் சிறப்பான திருவிழாக்களாகும்.

ஆடிமாதத்தில் ஆடிப்பூர விழா, புரட்டாசி மாதத்தில் நவராத்திரி விழா, ஐப்பசியில் கந்தசஷ்டி விழா, கார்த்திகையில் சோமவார சங்காபிஷே விழா, கோடைவிழா ஆகிய விழாக்கள் சிறப்பான விழாக்கள் ஆகும். புவியியல் ஆய்வுப்படி இந்த மலை 3,400 மில்லியன் ஆண்டுகள் பழமையானது. இந்த மலைமேல் உள்ள பாறைகள் மீது இரண்டு தளகட்டிட அமைப்பை கொண்டு உலகில் வேறு எங்கும் இல்லாத அதிசயமாக தொன்மையான கட்டிடக்கலைக்கு சான்றாக உள்ளது.

குடைவரை கோவில்கள்

கி.பி.7-ம் நூற்றாண்டை சேர்ந்த மகேந்திரவர்மனால் குடையப்பெற்ற இரண்டு குடைவரை கோவில்கள் இங்கு உள்ளது. நவீன கருவிகள் இல்லாத அன்றைய காலத்திலேயே குன்றின் மேல் கலையழகு மிக்க சிற்பங்களுடன் 273 அடி உயரத்தில் 417 படிகளுடன் இந்த கோட்டை கோவில் அமைந்துள்ளது. இந்த மலைக்கோவிலுக்கு கொடும்பாளூரில் இருந்து கற்களும், பிற பொருட்களும் கொண்டு வரப்பட்டு இந்த மலைக்கோவில் கட்டப்பட்டது என அறிய முடிகிறது.

மாணிக்க விநாயகர் சன்னதி முதல் தாயுமானவர் சன்னதி வரை படிக்கட்டுகள் கருங்கல்லால் மூடப்பட்ட தளஅமைப்பை கொண்டது. உச்சிவிநாயகரின் சன்னதி வாயிலில் இருந்து படிக்கட்டுகளும், மலையின் தோற்றமும் விநாயகரின் துதிக்கையை போல் இயற்கையிலேயே அமைந்துள்ளது. செட்டிப்பெண் ரத்தினாவதிக்காக இறைவன் தாயாக வந்து பிரசவம் பார்த்தார். சுகப்பிரசவம் நிகழ வேண்டுவோர், தாயுமானவரை நினைத்து திருநீறு இட்டால் சுகப்பிரசவம் நிகழ்கிறது.

பாதுகாப்பு அரண்

பிரார்த்தனை நிறைவேறியதும் வாழைப்பழத்தாரை சுவாமிக்கு நெய்வேத்தியம் செய்து பிரார்த்தனையை முடிப்பார்கள். நவகிரகங்கள் அனைத்தும் சூரிய பகவானை பார்த்த முகமாக இருப்பதால் இந்த தலத்தில் வழிபட நவகிரக தோஷங்கள் நீங்கும். விபீடணன் அயோத்தியில் இருந்து திரும்பும்போது, ரெங்க விமானத்தை ஸ்ரீரங்கத்தில் ஸ்தாபிக்க உச்சிப்பிள்ளையார் உதவியதாக புராண வரலாறு கூறுகிறது. இப்புராண வரலாற்றினை கூறும் சிற்பம் வசந்த மண்டபத்தூண் ஒன்றில் உள்ளது.

இந்த மலையை சுற்றி அமைக்கப்பட்டுள்ள கோட்டையின் வயது 510 முதல் 550 ஆண்டுகள் ஆகும். இந்த கோட்டையை நாயக்க மன்னர்கள் கட்டியுள்ளனர். திருச்சி மலைக்கோட்டை முதன்முதலாக விஜயநகர பேரரசால் பாதுகாப்பு அரணாக பயன்படுத்தப்பட்டது. முற்கால சோழர்கள், களப்பிரர்கள், பல்லவர்கள், பாண்டியர்கள், பிற்கால சோழர்கள், சுல்தானியர்கள், நாயக்கர்கள், விஜயநகர மன்னர்கள், ஆற்காடுநவாபுகள், ஆங்கிலேயர்கள் என திருச்சியை ஆண்ட அனைத்து அரசுகளின் அடையாளங்களை சுமந்தே மலைக்கோட்டை இன்னமும் வாழ்ந்து வருகிறது.

காவிரி ஆற்றின் அழகு

இத்தகைய சிறப்பு மிக்க இந்த மலைக்கோட்டை திருச்சியின் அடையாளமாக மட்டுமின்றி தமிழகத்திலேயே சிறப்பு வாய்ந்த வரலாற்று சின்னமாகவும் இருக்கிறது. சினிமா திரைப்பட பாடல்களில் திருச்சியின் பெருமையை கூறினால் அதில் மலைக்கோட்டையை பற்றிய வரிகள் நிச்சயம் இடம் பெற்று இருக்கும். மேலும், திருச்சியில் படமாக்கப்பட்ட கதைகளம் எனில் மலைக்கோட்டையை காண்பித்தே படத்தின் காட்சிகள் அமைக்கப்படும்.

திருச்சிக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டினரும், வடமாநிலத்தவரும் தவறாமல் மலைக்கோட்டையை சுற்றி பார்த்துவிட்டே செல்கிறார்கள். இங்கு சாதி, மதவேறுபாடின்றி அனைத்து மதத்தினரும் வந்து செல்கிறார்கள். மலைக்கோட்டை உச்சியில் நின்றபடி காவிரி ஆற்றின் அழகையும், திருச்சி நகரின் ஒட்டு மொத்த அழகையும் கண்டுகளிக்க முடியும். புகழ் வாய்ந்த இந்த மலைக்கோட்டை கோவிலுக்கு செல்வதற்கான சாலை வசதி போதுமானதாக இல்லை. மிகவும் குறுகிய அளவிலேயே சாலை உள்ளது.

ஆம்புலன்ஸ் செல்லக்கூட வழியில்லை

அந்த சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் மலைக்கோட்டைக்கு சென்று வருவதற்கு மிகவும் சிரமப்பட வேண்டி உள்ளது. இது தவிர, மலைக்கோட்டையை சுற்றி ஏராளமான குடியிருப்புகளும் பெருகிவிட்டன. கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தி கொள்வதால் அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ்கூட வந்து செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும், அவ்வப்போது போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் அங்கு வாகனம் நிறுத்த பார்க்கிங் வசதி செய்து தர வேண்டும்.

இதேபோல் மலைக்கோட்டையின் உச்சியின் பாறைகளில் காதல்ஜோடிகள் அமர்ந்துள்ளனர். அவர்கள் செல்போனில் செல்பி எடுத்து கொண்டும், சில்மிஷத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள். இது மலைக்கோட்டை உச்சிபிள்ளையாரை பயபக்தியுடன் தரிசிக்க வரும் பக்தர்களை முகம் சுளிக்க வைக்கிறது. குழந்தைகளுடனும் வருபவர்களும் இதுபோன்ற காட்சிகளை பார்த்துவிட்டு தர்மசங்கடத்துக்கு உள்ளாகிறார்கள். ஆகவே மலைக்கோட்டைக்கு சென்று அத்துமீறும் காதல்ஜோடிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து மலைக்கோட்டையின் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாகும். இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

அனுமதிக்கக்கூடாது

மலைக்கோட்டை பகுதியை சேர்ந்த ஸ்ரீஹரிஷ்:- மலைக்கோட்டைக்கு வரும் காதல் ஜோடிகளை நிச்சயமாக அனுமதிக்கக்கூடாது. வெளியூர்களில் இருந்து திருச்சியை சுற்றி பார்க்க ஏராளமானவர்கள் வருவார்கள். அவர்கள் மலைக்கோட்டைக்கு வந்து பார்க்கும்போது ஒரு சில காதல்ஜோடிகளை கண்டு முகம் சுளிக்க செய்வார்கள். திருச்சி என்றாலே மலைக்கோட்டை தான். ஆனால் இதை பூங்காவாக பயன்படுத்துவதை அனுமதிக்கக்கூடாது. மேலும், இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு வாகனம் நிறுத்த வசதி செய்து தர வேண்டும். சாலையில் நிறுத்துவதால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

பாரம்பரியம் பாதுகாக்கப்படும்

ரமணிலால்:- பொதுவாக கோவில் சார்ந்த இடங்களுக்கு பலவிதமான வேண்டுதல்களோடு பக்தர்கள் செல்வார்கள். அங்கு அநாகரிகமாக நடந்து கொள்பவர்கள் தாங்களாக திருந்தி கொள்ள வேண்டும். பொதுஇடத்தில் மற்ற பக்தர்கள் சங்கடம் அடையும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது. குறிப்பாக திருமணமாகாமல் இளம்வயதுடையவர்கள் ஜோடியாக வந்தால் அவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கலாம். அப்போது தான் மலைக்கோட்டையின் பாரம்பரியம் பாதுகாக்கப்படும்.

திருச்சியை சேர்ந்த மணி:- இவர்கள் தான் கோவிலுக்கு வர வேண்டும். இவர்கள் வரக்கூடாது என பிரித்து எல்லாம் பார்க்க முடியாது. ஆனால் மனக்கட்டுப்பாடுடன் நடந்து கொள்ள வேண்டும். பக்தர்களின் வசதிக்காக கோவிலில் பல்வேறு ஏற்பாடுகளை செய்கிறார்கள். ஆனால் இதில் தவறாக நடந்து கொள்பவர்கள் யார்?. உண்மையிலேயே மலைக்கோட்டையின் அழகை ரசிக்க வருபவர்கள் யார்?. சாமி தரிசனத்துக்காக வருபவர்கள் யார்? என ஒவ்வொருவரையும் கண்காணிக்க முடியாது. அவரவர் சுயக்கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story