சுள்ளான் ஆற்றை ஆக்கிரமித்துள்ள வெங்காயதாமரை செடிகள் அகற்றப்படுமா?


மெலட்டூர் அருகே சுள்ளான் ஆற்றை ஆக்கிரமித்துள்ள வெங்காய தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்

மெலட்டூர்:

மெலட்டூர் அருகே சுள்ளான் ஆற்றை ஆக்கிரமித்துள்ள வெங்காய தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுள்ளான் ஆறு

பாபநாசம் தாலுகாவின் முக்கிய பாசன வாய்க்கால் மற்றும் வடிகால் வாய்க்கால்களில் ஒன்றாக சுள்ளான் ஆறு உள்ளது. இதன் மூலம் பாபநாசம்` மற்றும் வலங்கைமான் தாலுகாவில் 1936 எக்டேர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பாபநாசம் தாலுகாவில் மட்டும் வேம்பகுடி, புரசக்குடி, செருமாக்கநல்லூர், அகரமாங்குடி, சோலைபூஞ்சேரி, கிடங்காநத்தம், கோடுகிளி, பொன்மான்மேய்ந்தநல்லூர், கோவிலாம்பூண்டி, கருப்பூர் மட்டையாண்திடல், மேலசெம்மங்குடி உள்பட பல கிராமங்களில் உள்ள பலநூறு ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி மற்றும் வடிகால் வசதி பெறுகின்றன.

ஆக்கிரமித்துள்ள வெங்காய தாமரை செடிகள்

தற்போது சுள்ளான் ஆற்றில் பாலூர், புரசக்குடியில் இருந்து வேம்பகுடி, அகரமாங்குடி வரையில் ஆற்றின் முழு பரப்பையும் வெங்காய தாமரை செடிகள் ஆக்கிரமித்து வாய்க்கால் முழுவதும் படர்ந்துள்ளது. தண்ணீர் வரத்து உள்ள காலங்களில் பாசன வாய்க்கால்களுக்கு தண்ணீர் செல்ல வெங்காயதாமரை செடிகள் தடையாக இருந்து வருகிறது. அதனால் விவசாய நிலங்கள் சரியான பாசனவசதி பெற முடியவில்லை. அதுபோல கடைமடை பகுதிகளுக்கும் தண்ணீர் செல்லமுடியாத நிலை இருந்து வருகிறது. எனவே தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறையினர் சுள்ளான் ஆற்றை ஆக்கிரமித்துள்ள வெங்காய தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story