பனையும், பனைமரத்தொழிலும் பாதுகாக்கப்படுமா?; சிறப்பு திட்டங்களை எதிர்பார்க்கும் பொதுமக்கள்


பனையும், பனைமரத்தொழிலும் பாதுகாக்கப்படுமா?; சிறப்பு திட்டங்களை எதிர்பார்க்கும் பொதுமக்கள்
x
தினத்தந்தி 17 Oct 2022 10:34 PM IST (Updated: 17 Oct 2022 10:54 PM IST)
t-max-icont-min-icon

பனையும், பனைமரத்தொழிலையும் பாதுகாக்க வேண்டும் என்றும், அதற்காக சிறப்பு திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தேனி

பனையும், பனைமரத்தொழிலையும் பாதுகாக்க வேண்டும் என்றும், அதற்காக சிறப்பு திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

பனை மரத்தின் பயன்கள்

தமிழ்நாட்டின் மாநில மரம் பனை. கற்பகத்தரு என்று பனை அழைக்கப்படுகிறது. பனை மரங்கள் கொடுக்கும் பயன்கள் ஏராளம். கோடைக்கு இதமான பதநீர், நுங்கு தருகிறது. பதனீரை காய்ச்சினால் கருப்பட்டி, பனைவெல்லம், பனங்கற்கண்டு கிடைக்கிறது. பனம்பழம் தித்திப்பானது. அது உடலுக்கு ஆரோக்கியமானது. பனைவிதைகளை மொத்தமாக விதைத்து பனங்கிழங்காக அறுவடை செய்யப்படுகிறது. பனை ஓலையில் பாய், அழகு சாதன பொருட்கள், பெட்டிகள் உள்பட பல தயாரிக்கப்படுகின்றன. அத்துடன், கூரை அமைக்க பனை ஓலை, வேலி அடைக்க பனை மட்டை என எண்ணற்ற பலன்களை தருகிறது. பனை தன் ஆயுளை முடித்து மடிந்தாலும், வீடு கட்டுவதற்கு உத்திரமாய், கடலுக்கு செல்வதற்கு கட்டுமரமாய் பயன்படுகிறது.

பனை மரம் மூலம் கிடைக்கும் உணவுப்பொருட்கள் உடலுக்கு ஆரோக்கியமானது. ஆயுளை அதிகரிக்கும் ஆற்றல் பனைப் பொருட்களுக்கு உண்டு. காகிதம் கண்டறியும் முன்பு வரை பழந்தமிழ் இலக்கியங்கள், காப்பியங்கள் யாவும் பனை ஓலையில் எழுதப்பட்டு ஓலைச்சுவடிகளாக பாதுகாக்கப்பட்டன.

ரூ.1 லட்சம் பரிசு

தற்போதைய காலகட்டத்தில் பனை மரங்கள் முழுமையாக பயன்படுத்தப்படுவது இல்லை. பனைத்தொழிலும் நலிவடைந்து விட்டது. கடந்த காலங்களில் எண்ணற்ற பனை மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டுள்ளன. பனை மரம் ஏறுதல் என்பது சவால் நிறைந்தது என்பதால், பலரும் அதில் நாட்டம் காட்டுவதில்லை. பனைத்தொழிலை நம்பிய குடும்பங்களில் இருந்து வளரும் தலைமுறையினர் கூட பனையேறும் தொழிலில் தங்களை ஈடுபடுத்திக்கொள்வதில்லை.

இதனால் இந்த தொழில் வேகமாகவே நலிவடைந்து வருகிறது. இதை உணர்ந்த தமிழக அரசு பனையேறும் கருவியை கண்டுபிடித்தால் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. பனை மரங்களை சரியான முறையில் பயன்படுத்தினால் அது மிகவும் லாபகரமான தொழிலாகவே இருக்கும். பதநீர் விற்பனை மட்டுமின்றி பதநீரை காய்ச்சி கருப்பட்டி, பனை வெல்லம், பனங்கற்கண்டு போன்றவை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தலாம்.

இவற்றுக்கு சந்தையில் எப்போதும் தனி மவுசு உண்டு. பதநீரை மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றும் அளவுக்கு பனம்பழத்தை பெரும்பாலும் யாரும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றுவது இல்லை. பனம்பழத்தில் இருந்து பனம்பழச்சாறு எடுப்பதோடு அதில் இருந்து பல வகையான மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்து சந்தைப்படுத்தலாம். ஆனால் அதற்கான பெரிய அளவிலான தொழிற்கூடங்கள் தமிழகத்தில் இல்லை.

பயன்படுத்தப்படாத பனைகள்

தேனி மாவட்டத்தில் பெரியகுளம் நகராட்சி குப்பைக்கிடங்கு அருகில் ஒரே இடத்தில் 500-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் உள்ளன. பழனிசெட்டிபட்டி கருப்பசாமி கோவில் பகுதியில் 600-க்கும் மேற்பட்ட பனை மரங்களும், எரசக்கநாயக்கனூரில் ஒரே இடத்தில் 600-க்கும் மேற்பட்ட பனை மரங்களும் உள்ளன. இதுபோன்ற இடங்கள் பனங்காடுகள் என்று அழைக்கப்படுகிறது. அத்துடன் போடி, சங்கராபுரம், தேனி, வைகை அணை, கண்டமனூர், கடமலைக்குண்டு, உத்தமபாளையம், காமாட்சிபுரம் உள்பட மாவட்டத்தின் பல இடங்களில் சாலையோரமும், விவசாய நிலங்களிலும் ஆயிரக்கணக்கான பனை மரங்கள் உள்ளன.

ஆனால், இந்த பனை மரங்கள் பயன்படுத்தப்படாமல் காட்சிப்பொருளாகவே உள்ளன. மாவட்டத்தில் ஒருவர் கூட பதநீர் உற்பத்தி செய்யவில்லை என்பது வேதனையான விஷயம். இதற்கு அனுமதி கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பித்தாலும் அனுமதி கொடுக்காத நிலைமையே உள்ளது. இதனால், தேனி மாவட்டத்தில் அழிக்கப்பட்ட பனைகள் போக, எஞ்சி இருக்கும் பல்லாயிரக்கணக்கான பனை மரங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளன. அதோடு கடந்த 3 ஆண்டுகளாக மாவட்டத்தில் ஏராளமான தன்னார்வலர்கள் பனை விதைகள் விதைக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வரும் காலத்தில் மாவட்டத்தில் பனை மரங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

அனுமதி கிடைக்கவில்லை

பனை மரங்களை பாதுகாக்கவும், பனை பொருட்கள் சார்ந்த தொழில்களை பாதுகாத்து மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து தேனி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பழனிசெட்டிபட்டியை சேர்ந்த பனையேறும் தொழிலாளி கருப்பையா:- நான் பனை மரங்களை குத்தகைக்கு எடுத்து மரம் ஏறி நுங்கு வெட்டி விற்பனை செய்து வருகிறேன். பதநீர் இறக்க அனுமதிகேட்டு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேனி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தேன். இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. மாவட்டத்தில் யாருக்கும் இதுவரை அனுமதி கொடுக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பதநீர் இறக்கினால் தான் கருப்பட்டி போன்றவை தயாரிக்க முடியும். எனவே பதநீர் இறக்குவதற்கு அரசு எந்த கெடுபிடிகளும் செய்யாமல் இருந்தாலே பனையேறும் தொழிலாளர்கள் நிம்மதியாக பனை சார்ந்த தொழில் செய்ய முடியும்.

போடியை சேர்ந்த விவசாயி முருகன்:- நான் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு தேனி மாவட்டத்தில் பதநீர் இறக்குவதை பார்த்துள்ளேன். அதற்கு பிறகு பதநீர் இறக்குவதையோ, பனை தொழில் செய்வதையோ பார்க்கவில்லை. ஆனால் ஏராளமான பனை மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டதை பார்த்துள்ளேன். கடந்த சில ஆண்டுகளாக நானும் பனை விதைகளை சேகரித்து விதைத்து வருகிறேன். 2 ஆண்டுகளாக தன்னார்வலர்கள் பலருக்கும் பனை விதைகளை சேகரித்து இலவசமாக கொடுத்து வருகிறேன். பனை மரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். பனையேறும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க திட்டங்களை செயல்படுத்த வேண்டும். சிறந்த பனையேறும் தொழிலாளர்களை பயற்சியாளர்களாக தேர்வு செய்து தமிழகம் முழுவதும் பனையேறும் பயிற்சிகள் அளித்து பனை தொழிலை மேம்படுத்த வேண்டும். பனையேறும் பயிற்சி பெற விரும்பும் இளைஞர்களுக்கு காப்பீடு வசதிகளை அரசு செய்து கொடுக்க வேண்டும்.

பனையேறும் தொழிலாளர்கள்

காமாட்சிபுரத்தை சேர்ந்த வாழ்வரசிபாண்டியன்:- தேனி மாவட்டத்தில் கலப்படமில்லாத பதநீர் எங்கும் குடிக்க முடியவில்லை. வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டு வந்து தான் பதநீர் விற்பனை செய்கின்றனர். மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பனை மரங்கள் இருந்தும் பயன்படுத்தப்படாமல் உள்ளது. அவற்றை பயன்படுத்த தேவையான சிறப்பு திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளதால் அதற்கு மாற்றாக பனை ஓலை, பனை நார்களால் செய்யப்பட்ட பொருட்களுக்கு மக்கள் மாற வேண்டும். அதற்கு இதுபோன்ற தொழில்களை பெரிய அளவில் மேற்கொள்வதற்கு அரசு மானியம், பயிற்சிகள் அளிக்க வேண்டும்.

தாய்லாந்து நாட்டில் பனை மரங்களில் ஏணி போன்ற கட்டமைப்பை உருவாக்கி உள்ளனர். அதுபோன்ற கட்டமைப்பு அமைத்தால் ஏணி ஏறுவது போல் பனை மரங்களில் ஏற முடியும். ஆனால், அதற்கு அதிக செலவு ஆகும். பனை மரங்கள் கூட்டமாக உள்ள பனங்காடுகளில் அதுபோன்ற வசதிகளை அரசு மானியத்துடன் செய்து கொடுக்கலாம். உயரமான மின்கம்பங்களை பராமரிக்க பயன்படுத்தும் எந்திரங்களை பனையேறும் தொழிலுக்கு பயன்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளலாம்.


Next Story