பனை தொழில் பாதுகாக்கப்படுமா?


பனை தொழில் பாதுகாக்கப்படுமா?
x

பனை தொழிலை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் முக்கிய தொழிலாக நெசவுத்தொழில், பால்கோவா உற்பத்தி, விவசாயம் உள்ளது. இவற்றை தொடர்ந்து பனைமரத்தொழில் விளங்குகிறது. ஸ்ரீவில்லிபுத்தூரில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனை மர தொழிலாளர்கள் உள்ளனர்.

1½ லட்சம் பனை மரங்கள்

ஸ்ரீவில்லிபுத்தூர் மம்சாபுரம், செண்பகத்தோப்பு, திருவண்ணாமலை, பந்தபாறை, தொட்டியபெட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவு பனை மரங்கள் உள்ளன. இங்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனை மரங்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான சாலியன் தோப்பு, மம்சாபுரம், மறவன் குளம், அழுத கண்ணீர் ஆட்டுக்குளம் போன்ற பகுதிகளில் ஏராளமான பனை மரங்கள் உள்ளன.

அதேபோல ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர், புத்தூர், கிருஷ்ணாபுரம், சொக்கநாதன் புத்தூர், கோவிலூர், மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பனைமரங்கள் உள்ளன. இதில் பதனீருக்காக பயன்படும் 60 ஆயிரம் மரங்களை நம்பி இப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும், கருப்பட்டி உற்பத்தி செய்யும் தொழிலாளர்களும் உள்ளனர்.

பயனுள்ள பொருட்கள்

பனை மரத்திலிருந்து வீடு கட்ட தேவையான பனை சட்டம், வீட்டில் கூரை அமைக்க பனை ஓலை, உடலுக்கு சுண்ணாம்புச்சத்தை அளிக்கக்கூடிய பதநீர், பனங்கற்கண்டு, இரும்பு சத்தை வழங்கக்கூடிய கருப்பட்டி, உடல் சூட்டை தணிக்கும் பனைபழம், பனங்கிழங்குகள், பனைமர ஓலையில் இருந்து பயன்படுத்தப்படும் விளக்குமாறு, விசிறி, பனை ஓலையில் பெட்டி, கூடை, அழகிற்காக வைக்கப்படும் அலங்கார பொருட்கள், நார்கட்டில் என பல்வேறு பயனுள்ள வகைகளில் பனைமரங்கள் பயன்படுகின்றன. இவ்வாறு பல்வேறு பயன்கள் தரக்கூடிய பனை மரங்களின் எண்ணிக்கையும், தொழிலாளர்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டு வருகிறது. இதுகுறித்து தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

ரேஷன்கடையில் பனை பொருட்கள்

கம்மாபட்டியை சேர்ந்த தொழிலாளி திருப்பதி கூறுகையில்,

உயிரை பணயம் வைத்து பனை மரத்தில் ஏறி பதநீர் இறக்குகிறோம். நாள் ஒன்றுக்கு ஒரு தொழிலாளி 20 முதல் 30 மரம் வரை ஏறி வேலை செய்ய முடியும். தமிழக அரசு பனை தொழிலாளர்களுக்கு தனியாக பனை வாரியம் அமைத்துள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்கது. இந்த பனை வாரியத்தில் பனையேறும் தொழிலாளர்களை உறுப்பினர்களாக சேர்த்து அவர்களுக்கு மருத்துவ வசதி, மற்றும் பள்ளி, வேலை வாய்ப்பு கல்வியில் இட ஒதுக்கீடு, வங்கி கடன் உதவி வழங்கி பனைமர தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழகம் முழுவதிலும் உள்ள ரேஷன் கடைகளில் பனை பொருட்கள் விற்பனை செய்யப்பட வேண்டும்.

நிவாரண தொகை

ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த பட்ஷி ராஜா வன்னியராஜ் கூறுகையில்,

பனை ஏறும் தொழிலை நம்பி ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. தற்போது பனைமரமும் குறைந்து வருகிறது. இந்த தொழிலில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. பனையேறும் தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். பனை ஏறுவதற்கு வசதியாக எந்திரங்கள் வழங்கவேண்டும். மீனவர்களுக்கு வேலையில்லாத காலங்களில் நிவாரண தொகை வழங்குவது போல் பனையேறும் தொழிலாளர்களுக்கு வேலை இல்லாத நாட்களுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும்.

தனியார் வியாபாரிகள்

புத்தூரை சேர்ந்த தொழிலாளி பசியாப்பழம் கூறுைகயில்:- கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் 5 அரசு கூட்டுறவு கருப்பட்டி உற்பத்தி மற்றும் விற்பனை சங்கங்கள் செயல்பட்டு வந்தன. உற்பத்தி செய்யப்படும் கருப்பட்டிகளை அரசு நிர்ணயம் செய்யும் விலையில் கூட்டுறவு சங்கத்தில் கொடுத்து பணமாக பெற்று வந்தோம். இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக இந்த கூட்டுறவு சங்கங்களை அரசு செயல்படுத்துவதில் அக்கறை காட்டவில்லை. எனவே சங்கங்கள் அனைத்தையும் தற்போது தனியார் வியாபாரிகள் பயன்படுத்தி வருகின்றனர். கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு கொண்டிருந்த சமயத்தில் கிலோ ஒன்றுக்கு ரூ.300-க்கும் மேல் கிடைத்து வந்த நிலையில், தற்போது வியாபாரிகள் தங்களிடம் இருந்து ஒரு கிலோ கருப்பட்டியை ரூ.180-க்கும் குறைவாகவே வாங்கிச் செல்கின்றனர். இதனால் தங்களுக்கு மிகுந்த நஷ்டம் ஏற்படுகிறது.



Next Story