ஊராட்சி மன்றம், கிராம நிர்வாக அலுவலகங்கள் புதிதாக கட்டித்தரப்படுமா?
ஆலங்குடியில் உள்ள பழைய கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு ஊராட்சி மன்றம், கிராம நிர்வாக அலுவலகங்கள் புதிதாக கட்டி தரப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
கிராம நிர்வாக அலுவலகம்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வடக்கு கொத்தக்கோட்டை ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் உள்ளது. தாலுகாவில் அதிக மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளில் திருவரங்குளம் ஒன்றியத்தில் கொத்தக்கோட்டை ஊராட்சியும் ஒன்று. இந்த ஊராட்சியில் 15 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர்.
மேற்கண்ட பழைய கட்டிடத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்த வண்ணம் உள்ளது. மேலும் ஊராட்சி மன்ற அலுவலகம் பூட்டியே கிடக்கிறது. தற்போது கொத்தக்கோட்டை மேற்கு பகுதியில் இருந்து கிழக்கு பகுதியில் சுமார் 11 ஏக்கர் கொண்ட முனிக்கோவில் பத்தையில் பொது இ-சேவை மையம் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அந்த கட்டிடத்தில் தற்காலிகமாக ஊராட்சி மன்ற அலுவலகம் இயங்கி வருகிறது.
கோரிக்கை
மேலும், கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களும் மிகுந்த அச்சத்துடன் வந்து செல்கின்றனர். இந்த கட்டிடம் எப்போது இடிந்து விழும் என்ற பயத்துடன் வந்து செல்கின்றனர். எனவே ஊராட்சி மன்ற அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம் உள்ள கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆலங்குடி பகுதியை சேர்ந்த செந்தில்:- ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ள மேற்கூரை சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கொட்டியுள்ளது. இதனால் அலுவலகம் சில வருடங்களாக பூட்டியே கிடக்கிறது. எனவே இந்த கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.
சான்றிதழ் பெற முடியவில்லை
கொத்தக்கோட்டை பகுதியை சேர்ந்த கருப்பையா:- கிராம நிர்வாக அலுவலகம் கஜா புயலின் போது பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அந்த அலுவலகத்தில் மின் வினியோகம் தடை பட்டது. ஆனால் தற்போது வரை அந்த அலுவலகத்திற்கு மின் வினியோகம் இல்லாமல் இயங்கி வருகிறது. அங்கு செல்லக்கூடிய பொதுமக்கள் கணிணி வழியாக எவ்வித சான்றும் பெறுவதற்கும் வழி இல்லாமல் உள்ளனர். மேலும் வெளிச்சமின்மை மற்றும் மின்விசிறி வசதிகள் இல்லாமல் உள்ளது. அலுவலக மேல் தளத்தில் மரத்தின் வேர்கள் சுற்றி காணப்படுகிறது. இந்த பகுதியில் கனமழை பெய்தால் கட்டிட சுவர்கள் ஈரப்பதத்துடனேயே காணப்படுகிறது. எனவே இப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் அலுவலகத்திற்கு சென்று சான்றிதழ்கள் பெறுவதற்கு மிகுந்த அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.
புதிய கட்டிடம் கட்ட வேண்டும்
குமார்:- மேற்கண்ட கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவர், துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், அரசு அதிகாரிகள் அனைவருக்கும் புகார் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்த கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.
கொத்தக்கோட்டை பகுதியை சேர்ந்த ரமேஷ்:- 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு அனைத்து விவரம் மற்றும் சான்றிதழ்கள் பெறுவதற்கு ஊராட்சி மன்ற அலுவலகத்தை நோக்கி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பெண்கள் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் அங்கு சென்று வருவதற்கு மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.
மனஉளைச்சல்
சக்திவேல்:- இப்பகுதியை சேர்ந்த பெண்கள் இ-சேவை மையத்திற்கு சென்று வருவதற்கு மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். எனவே ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.