அத்தியாவசிய பொருட்கள் விலை குறையுமா? பொருளாதார ஆலோசகர், வியாபாரிகள் கருத்து


அத்தியாவசிய பொருட்கள் விலை குறையுமா?  பொருளாதார ஆலோசகர், வியாபாரிகள் கருத்து
x
தினத்தந்தி 19 Dec 2022 12:15 AM IST (Updated: 19 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பணவீக்கம் 5.8 சதவீதமாக குறைந்துள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் விலை குறையுமா? என்பது பற்றி பொருளாதார ஆலோசகர், வியாபாரிகள் கருத்து தெரிவித்தனர்

தென்காசி

பணவீக்கம் என்பது நாட்டில் உணவு பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலையைப் பொறுத்து, நுகர்வோர் குறியீட்டு எண் அடிப்படையில் மாதந்தோறும் கணக்கிடப்படுகிறது.

பண வீக்கம் குறைந்துள்ளதா? அதிகரித்துள்ளதா? என்பதை கடந்த மாதங்களுடன் ஒப்பிட்டு மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை ஒவ்வொரு மாதமும் அறிவிப்பை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த நவம்பர் மாதத்திற்கான, மொத்த விலைக்கான பணவீக்க நிலை குறித்து மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 'மளிகை பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றிற்கான மொத்த விலை பணவீக்கம் கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு 5.85 சதவீதமாக சரிந்துள்ளது. அதேப்போன்று, சில்லரை பணவீக்கம் கடந்த 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு 5.88 சதவீதமாக குறைந்துள்ளது' என்று தெரிவிக்கப்பட்டது.

இதனைச் சுட்டிக்காட்டி நாடாளுமன்றத்தில் 2022-23-ம் நிதி ஆண்டுக்கான துணை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் 'பணவீக்கம் மேலும் குறையும்' என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்தார்.

அப்போது அவர் பேசுகையில், 'சில்லரை பணவீக்கம் கடந்த 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. இதனை மேலும் குறைப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். அத்தியாவசிய பொருட்கள் விலை நிலவரத்தை மத்திய அரசு தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருகிறது. குறைந்த அளவு பணவீக்கத்துடன் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக திகழ்கிறது. எனவே பொருளாதார தேக்கநிலை பற்றி அச்சம் தேவையில்லை' என்று கூறி இருந்தார்.

பணவீக்கம் குறைந்து வருவதாக சொல்லப்படுவதால், அது அத்தியாவசிய பொருட்களின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறதா? என்பது பற்றி பல்வேறு தரப்பினரின் பார்வை வருமாறு:-

பொருளாதார ஆலோசகர்

பொருளாதார ஆலோசகர் வ.நாகப்பன்:-

இந்தியாவில் பணவீக்கம் தொடர்ந்து இருந்து வருகிறது. இனியும் தொடர்ந்து இருக்கத்தான் போகிறது. பண வீக்கம் 4 முதல் 6 சதவீதம் அளவுக்குள் இருக்கும். சில நேரங்களில் இந்த அளவைத் தாண்டி இருக்கிறது. 1992-1994-ம் ஆண்டுகளின் போது பண வீக்கம் அதிகபட்சமாக 17 சதவீதம் அளவில் கூட இருந்துள்ளது.

பணவீக்கம் குறைந்தால் விலைவாசி குறைந்து விடும் என்று கருதக்கூடாது. பணவீக்கம் குறைந்தாலும் விலையேற்றம் இருக்கவே செய்யும். அதனை கட்டுப்படுத்த முடியாது. ஆனால் விலையேற்றத்தின் வேகத்தை கட்டுப்படுத்தும். உதாரணமாக ஒரு பொருள் 6 சதவீதம் உயர்வதற்கு பதிலாக 4 சதவீதம் அளவுக்கு உயர்வு இருக்கும்.

அதாவது கடந்த ஆண்டு ரூ.100-க்கு வாங்கிய ஒரு பொருள் இந்த ஆண்டு ரூ.108-க்கு விற்பனையாகி அடுத்த ஆண்டு ரூ.112 ஆக விலை அதிகரிப்பது போன்றது ஆகும்.

வேளாண் உற்பத்தி

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நெல்லை வடக்கு மாவட்ட தலைவர் ஏ.செல்வராஜ் கூறியதாவது:-

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியபடி பணவீக்கம் குறைந்து உள்ளதை வரவேற்க வேண்டியதுதான். ஆனால் அத்தியாவசிய பொருட்கள் விலைவாசி எதுவும் குறைந்தபாடில்லை. உள்நாட்டு உற்பத்தியை பெருக்கி ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும். இறக்குமதியை குறைத்தால் பொருளாதாரம் முன்னேற்றம் காணும். விலைவாசி தானாக குறைந்து விடும். வேளாண் விளைபொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் முன்னேற்றம் ஏற்படும். வேளாண் உற்பத்தி பெருகிவிட்டால் பணவீக்கம் 4 சதவீதம் வரை குறைந்து விடும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் திட்டங்களை தீட்டி நிதியும் ஒதுக்குகிறார்கள். ஆனால் கீழ்மட்டத்தில் அதை முறையாக செயல்படுத்துவது இல்லை. எனவே, வேளாண் உற்பத்தியை பெருக்க மத்திய, மாநில அரசுகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும்

நெல்லை வண்ணார்பேட்டையை சேர்ந்த குடும்பத்தலைவி முத்துமாரி:-

பணவீக்கம் குறைந்து இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. காய்கறிகள் உள்பட எந்த பொருட்களின் விலையும் குறையவில்லை. வீட்டு கடனுக்கு வட்டி விகிதத்தை உயர்த்தி விட்டார்கள். எனவே விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொழில் வர்த்தக கூட்டமைப்பு தலைவர் குணசிங் செல்லத்துரை:- மத்திய அரசு பணவீக்கம் குறைந்திருப்பதாக கூறுகிறது. அதனால் எந்தவித பலனும் கிடைக்கவில்லை. வங்கிகள் பல ஆயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டுகின்றன. நமது நாட்டில் தொழில் கடன் உள்ளிட்ட கடன்களுக்கு அதிக வட்டி வசூலிக்கப்படுகிறது. மேலும் முதலீடுகளுக்கும் வட்டி விகிதம் அதிகமாகவே இருக்கிறது. இதை குறைக்க வேண்டும். குறிப்பாக வேளாண்மை கடன்களின் வட்டி விகிதத்தை மேலும் பெருமளவு குறைக்க வேண்டும். சிறு-குறு தொழில்களுக்கு கடன் வட்டியையும் குறைக்க வேண்டும். நெல்லை மாவட்டத்தில் ஆண்டுக்கு 39 டன் தங்க நகைகள் விற்பனை ஆகிறது. இது பொதுமக்கள் தங்கத்தில் ஆர்வமாக முதலீடு செய்வதையே காட்டுகிறது. பணவீக்கம் குறைந்தால் தானாக பொதுமக்களிடம் பணப்புழக்கம் அதிகரித்து விடும். ஆனால் பெட்ரோல், டீசல் விலை குறையாத வரை விலைவாசி எதுவும் குறையாது.

விலை குறையவில்லை

தென்காசியில் பலசரக்கு மற்றும் காய்கறிகள் கடை நடத்தி வரும் முருகேசன்:-

அனைத்து பொருட் களின் விலையும் சமீப காலமாக உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது. எந்த பொருளின் விலையும் குறையவில்லை. பாமாயில் எண்ணெய் ஒரு லிட்டர் ரூ.68-க்கு விற்பனை ஆனது. தற்போது ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.75-க்கு விற்பனையான உளுந்தம் பருப்பு தற்போது ரூ.100-ஐ தாண்டி உள்ளது. ரூ.100-க்கு விற்பனையான உருட்டு பருப்பு தற்போது ரூ.125 வரை விற்பனை செய்யப்படுகிறது. சோப்பு விலை கூட தாறுமாறாக உயர்ந்துள்ளது. 6 மாதத்துக்குள் ரூ.10-ல் இருந்து ரூ.15 ஆக அதிகரித்து உள்ளது. சில சோப்பு கம்பெனிகள் விலையை உயர்த்தாமல் அதன் அளவை குறைத்து உள்ளனர். மொத்தத்தில் எந்த பொருளும் விலை குறையவில்லை. இதன் காரணமாக அனைத்து தொழில்களும் பாதிப்பு அடைகின்றன. நடுத்தர மக்கள் மிகுந்த கஷ்டத்துக்கு உள்ளாகிறார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பணவீக்கம் குறைவது ஒருபுறம் இருந்தாலும் பெட்ரோல்-டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் போன்ற மிகவும் அத்தியாவசிய பொருட்கள் விலை இனி உயராமல் கட்டுக்குள் வைத்துக்கொண்டாலே போதும் என்பது பொதுமக்களின் பொதுவான கோரிக்கையாக உள்ளது.

---------------------------------------------------

'பணவீக்கம்' வார்த்தையை எளிமைப்படுத்தியவர் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார்

தமிழில் சில வார்த்தைகள் அலங்காரத்துடன் இருக்கும். இந்த வார்த்தைகளின் அர்த்தம் படித்தவர்கள் மனதில் சட்டென்று பதிந்தாலும் படிக்காத பாமர மக்களுக்கு உடனே புரியாது.

பொருளாதார மேதைகள் பணவீக்கம் என்ற வார்த்தையை பயன்படுத்த தொடங்கிய நேரத்தில் பாமர மக்கள் அதன் உள் அர்த்தம் புரியாமல் குழப்பம் அடைந்தனர்.

பாமர மக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் விலைவாசி உயர்வுதான் பணவீக்கம் என்று 'தினத்தந்தி' மூலம் மக்களுக்கு தெளிவுப்படுத்தியவர் மறைந்த தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story