கடலூர் தாலுகா அலுவலகத்தில் பூட்டிக்கிடக்கும் பொதுமக்கள் காத்திருப்பு கூடம் திறக்கப்படுமா?
கடலூர் தாலுகா அலுவலகத்தில் பூட்டிக்கிடக்கும் பொதுமக்கள் காத்திருப்பு கூடம் எப்போது திறக்கப்படும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
கடலூர் தாலுகா அலுவலகத்திற்கு ஏராளமான பொதுமக்கள் வருமானம், சாதி, இருப்பிட சான்றிதழ் வாங்குவதற்காகவும், முதியோர் உதவி தொகை, இலவச மனைப்பட்டா, பட்டா மாற்றம், நில அளவை, ரேஷன் கார்டு உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள், உதவிகள் கேட்டு வந்து செல்கிறார்கள். ஆன்லைனில் பதிவு செய்தாலும் பெரும்பாலும் தாலுகா அலுவலகத்திற்கு வந்த பிறகே சான்றிதழ்கள் கிடைக்கிறது.
இவ்வாறு தாலுகா அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் நலன் கருதி, அங்கு பொதுமக்கள் காத்திருப்பு கூடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. அமைத்த சில நாட்கள் மட்டும் காத்திருப்பு கூடம் திறந்து வைக்கப்பட்டது. இதில் தாலுகா அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் சிறிது நேரம் இருந்து இளைப்பாறி சென்றனர். ஆனால் அதன்பிறகு இந்த காத்திருப்பு கூடம் பூட்டப்பட்டது. தற்போது வரை மூடிய நிலையிலேயே உள்ளது.
திறக்க வேண்டும்
இதனால் தாலுகா அலுவலகத்திற்கு வரும் மக்கள் கொளுத்தும் வெயிலிலும், மழையிலும் காத்திருக்கும் நிலை உள்ளது. நீண்ட தூரத்தில் இருந்து வரும் மக்கள் சற்று நேரம் அமர்ந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்ட இந்த காத்திருப்பு கூடத்தை திறக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இது வரை காத்திருப்பு கூடம் திறக்கப்படவில்லை.
இந்நிலையில் கடலூர் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் பங்கேற்று மனு அளிப்பதற்காக திருவந்திபுரம் குறுவட்டத்தை சேர்ந்த 8 கிராம மக்கள் வந்து சென்கின்றனர். இவர்கள் அனைவரும் மனு அளிப்பதற்காக வெயிலில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இந்த முகாம் வருகிற 21-ந் தேதி (புதன்கிழமை) வரை நடக்கிறது. ஆகவே இப்போதாவது பொதுமக்கள் நலன் கருதி காத்திருப்பு கூடத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.