வடபாதிமங்கலத்தில் சாலையோர பள்ளம் சீரமைக்கப்படுமா?
வடபாதிமங்கலத்தில் சாலையோர பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூத்தாநல்லூர்:
வடபாதிமங்கலத்தில் சாலையோர பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடபாதிமங்கலம் சாலை
கூத்தாநல்லூரில் இருந்து வடபாதிமங்கலம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை மன்னார்குடி, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், கூத்தாநல்லூர், கொரடாச்சேரி, குடவாசல், திருவாரூர், மாவூர், எட்டுக்குடி மற்றும் ஏனைய ஊர்களை இணைக்கும் முக்கிய வழித்தடமாகும். இதனால் அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி கல்லூரி வாகனங்கள், கார், வேன், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கனரக வாகனங்கள் என தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையில் சென்று வருகின்றன.
இந்த சாலை கடந்த 40 ஆண்டுகளாக மிகவும் குறுகலான சாலையாகவும், சாலையில் ஆங்காங்கே குண்டும், குழியும் ஏற்பட்டு சேதமடைந்தது.
தடுப்பு கம்பிகள்
இதையடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேதமடைந்த குறுகலான சாலை அகலமான சாலையாகவும், முழுமையான தார்சாலையாகவும் சீரமைக்கப்பட்டது. இந்த சாலை பல கிலோமீட்டர் தூரம் வரை வெண்ணாற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளதால் சில இடங்கள் ஆற்றின் கரையோரத்தில் தடுப்பு கம்பிகள் ஏற்படுத்தப்பட்டது. அதன்படி வடபாதிமங்கலத்தில் உள்ள புனவாசல் என்ற இடத்தில் ஆற்றின் கரையோரத்திலும் தடுப்பு கம்பிகள் ஏற்படுத்தப்பட்டது. தற்போது அங்கு ஆற்றின் கரையோர பகுதி சரிந்து விழுந்து விட்டதால், அங்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. சாலையிலும் சற்று விரிசல் ஏற்பட்டு காணப்படுகிறது. இதனால் அங்கு அமைக்கப்பட்ட தடுப்பு கம்பிகளும் சாயும் நிலையில் காணப்படுகிறது.
பள்ளத்தை சீரமைக்க வேண்டும்
இதனால் சாலையோரத்தில் ஏற்பட்ட பள்ளம் மேலும் சரிந்து விழுந்து விபரீதம் ஏற்படுமோ? என்று வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். மேலும் எதிர்பாராதவிதமாக பள்ளம் ஏற்பட்ட இடத்தில் எதிர் எதிரே வரக்கூடிய வாகனங்கள் கடந்து சென்று வர தயங்குகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைத்து தர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.