தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படுமா?
இடையிறுப்பு அரசுபள்ளி அருகே கட்டிட பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
மெலட்டூர்:
இடையிறுப்பு அரசுபள்ளி அருகே கட்டிட பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
15 அடி ஆழ பள்ளம்
தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், இடையிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் புதிதாக வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்காக 15 அடி ஆழத்திற்கு பெரிய அளவிலான பள்ளம் தோண்டப்பட்டது.
2 மாதங்களுக்கு மேலாகியும் கட்டுமான பணி நடைபெறவில்லை. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் பள்ளத்தில் தண்ணீர் தேங்கி குட்டை போல் காணப்படுகிறது.
உயிரிழப்பு ஏற்படும் அபாயம்
தற்போது இன்று(திங்கட்கிழமை) முதல் பள்ளிகள் திறக்க உள்ளதால் இந்த பள்ளத்தில் மாணவர்கள் விழும் அபாயம் உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன்பு கட்டிட பணிக்காக தோண்டிய பள்ளத்தை மூட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், பள்ளி கட்டிட பணிக்காக பள்ளம் தோண்டி இரண்டு மாதங்களுக்கு மேலாகியும், கட்டிட பணி தொடங்கப்படாமலும், பள்ளம் மூடப்படாமலும் உள்ளது.
மூட வேண்டும்
இந்த பள்ளத்தில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்பதால் கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்க உள்ளதால் மாணவர்கள் நலன் கருதி தோண்டப்பட்ட பள்ளத்தை உடனடியாக மூட கல்விதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.