வரதமாநதி கூட்டாறு தடுப்பணை திட்டம் கைகூடுமா?
ஆயக்குடி மக்களின் அரை நூற்றாண்டு கனவான வரதமாநதி கூட்டாறு தடுப்பணை திட்டம் கைக்கூடுமா? என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.
மலையும், மலை சார்ந்த பகுதிகளை தன்னகத்தே கொண்டது திண்டுக்கல் மாவட்டம். இங்கு கிழக்கு மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகள் உள்ளன. இதில் மேற்குத்தொடர்ச்சி மலையின் கிழக்கு நீட்சிய பழனி மலைத்தொடரில்தான் சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானல் மற்றும் தாண்டிக்குடி, பெரும்பாறை, பூம்பாறை உள்பட ஏராளமான மலைக்கிராமங்கள் உள்ளன.
வரதமாநதி அணை
இந்த மலைத்தொடர்கள் தான் மாவட்டத்தின் குடிநீர் மற்றும் விவசாயத்துக்கான ஆதாரமாக திகழ்கிறது. அதாவது மலைப்பகுதியில் பெய்யும் நீரானது ஆறுகளாகவும், ஓடைகளாகவும் பாய்ந்து மாவட்டத்தில் உள்ள தரிசு நிலங்களை வளப்படுத்துகிறது. அந்தவகையில் பழனி, ஆயக்குடி பகுதியை வளப்படுத்தும் அணையாக வரதமாநதி அணை உள்ளது.
ஆயக்குடி, பழனி பகுதியின் குடிநீர் மற்றும் பாசனத்துக்காக கடந்த 1978-ம் ஆண்டு வரதாபட்டினம் அருகே உள்ள இரு குன்றுகளை இணைத்து வரதமாநதி அணை கட்டப்பட்டது. அணையின் மொத்த உயரம் 66.47 அடி. அணையில் 110.9 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமிக்க முடியும். அணை பயன்பாட்டுக்கு வந்த பின்பு பழனி, ஆயக்குடியில் இருபோக நெல் விவசாயம் நடந்து வந்தது. மேலும் ஆயக்குடியில் கொய்யா சாகுபடியும் சிறப்பாக நடைபெற்றது. ஆனால் காலப்போக்கில் ஒருமுறை பருவமழை பொய்த்துவிட்டாலே, ஆயக்குடியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவானது.
அரை நூற்றாண்டு
இதற்கு குறைந்த அளவிலான அணையின் நீர்ப்பிடிப்பு, தற்போது வரை அணை தூர்வாரப்படாதது போன்றவை முக்கிய காரணங்களாகும். இது ஒருபுறம் இருக்க பெருகி வரும் மக்கள்தொகை, விவசாய பயன்பாட்டுக்கான நீர்தேவை அதிகரிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு வரதமாநதி அணை நீர்ப்பிடிப்பில் கூட்டாறு தடுப்பணை கட்ட வேண்டும் என ஆயக்குடி மக்கள் தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கை தற்போது எழுந்தது அல்ல. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக மக்கள் விடுத்து வரும் அறைகூவலாகும். இதுகுறித்து ஆயக்குடி மக்கள், விவசாயிகள் கூறியதாவது:-
கூட்டாறு தடுப்பணை
வேலுச்சாமி (கூட்டாறு தடுப்பணை குழு):- வரதமாநதி அணைக்கு பன்றிமலை, வடகவுஞ்சி ஆகிய பகுதிகளில் உள்ள நீரோடைகள் மூலம் நீர்வரத்து ஆகிறது. இந்த நீரோடைகள் இணையும் பகுதியே கூட்டாறு. அந்த இடத்தில் இயற்கையாகவே தடுப்பணை கட்டுவதற்கு ஏற்ற பாறைகள் உள்ளன. இங்கு தடுப்பணை கட்டினால் மழைக்காலத்தில் அணையில் இருந்து தண்ணீர் வீணாவது தடுக்கப்படும். அதாவது ஒரு இரவு மழை பெய்தாலே அணை முழு கொள்ளளவை எட்டிவிடுகிறது. காரணம் குறைவான நீர்ப்பிடிப்பு பகுதி. இதேபோல் கோடை காலம் வந்துவிட்டால் அணை விரைவாக வறண்டு விடும் நிலைக்கு செல்கிறது. இதன் விளைவாக, ஆயக்குடி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் அடிக்கடி அரங்கேறுகிறது.
எனவே நீர் வீணாவதை தடுக்கவும், பழனி, ஆயக்குடி பகுதிக்கு குடிநீர், பாசனத்துக்கு தட்டுப்பாடே இல்லாத நிலையை உருவாக்கவும் கூட்டாறு தடுப்பணை திட்டத்தை கொண்டுவர வேண்டும். இதுதொடர்பாக அனைத்து துறை அலுவலகங்களிலும் மனு அளித்துள்ளோம். ஆனால் எவ்வித நடவடிக்கை இல்லை. எனவே தற்போதைய நீர் தேவையை கருத்தில் கொண்டு, வரதமாநதி கூட்டாறு தடுப்பணை திட்டத்தை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இரு போக சாகுபடி
முருகானந்தம் (விவசாயி):- ஆயக்குடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கு வரதமாநதி அணையில் இருந்தே சுத்திகரிப்பு செய்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அணை நீரால் ஆயக்குடி பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதால் கிணற்று பாசனம் மூலம் கொய்யா, மா, நாவல், எலுமிச்சை, சப்போட்டா உள்ளிட்ட தோட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த அணை பயன்பாட்டுக்கு வந்த தொடக்கத்தில் ஆயக்குடி பகுதியில் இருபோக நெல் சாகுபடி நடந்தது. ஆனால் தற்போது ஒரு போகத்துக்கே பெரும் பாடாய் உள்ளது.
காரணம் நீர்ப்பிடிப்பு பரப்பு சிறிய அளவு என்பதால் வரதமாநதி அணை எவ்வளவு விரைவாக நிரம்புகிறதோ, அதே அளவுக்கு விரைவாக நீர் வற்றி விடுகிறது. எனவே தான் குடிநீர் மற்றும் பாசனத்துக்கு வசதியாக வரதமாநதி கூட்டாறு தடுப்பணை திட்டத்தை கொண்டு வர வேண்டும் என எங்கள் பகுதி மக்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வருகிறோம். இதுதொடர்பாக 1993-ல் பொதுப்பணித்துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அது கண்டுகொள்ளப்படாத திட்டமாக மாறியது. ஆனால் தேர்தல் வரும்போதெல்லாம் அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் கூட்டாறு திட்டம் பற்றிய வாசகம் மட்டும் மறக்காமல் இடம்பெறும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீண்டும் ஆய்வு செய்து, வரதமாநதி கூட்டாறு திட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பட்ஜெட் கூட்டத்தில்...
செல்வராஜ் (விவசாயி):- ஆயக்குடி பெரியக்குளம், பழனி வையாபுரிக்குளம், இடும்பன்குளம் என கிட்டத்தட்ட 15-க்கும் மேற்பட்ட குளங்களுக்கு வரதமாநதி அணையில் இருந்துதான் கால்வாய் மூலம் தண்ணீர் வருகிறது. இந்த குளங்கள் நிரம்பினால்தான் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து கிணறுகளில் நீர் அதிகாிக்கும். அதைக்கொண்டுதான் கொய்யா, மா, தென்னை விவசாயம் நடந்து வருகிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே, நீர் பற்றாக்குறையால் விவசாயம் குறைந்து வருகிறது.
கடந்த பட்ஜெட் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க தடுப்பணைகள் கட்டப்படும் என அரசு அறிவித்தது. ஆனால் எங்கள் பகுதியில் பல ஆண்டுகால கோரிக்கையான வரதமாநதி கூட்டாறு தடுப்பணை திட்டத்தை நிறைவேற்றினால் பழனி, ஆயக்குடி மட்டுமின்றி ஒட்டன்சத்திரம் பகுதிக்கும் நீர்த்தேவையை பூர்த்தி செய்ய முடியும். எனவே இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
-------