காய், கனி கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் மீண்டும் செயல்பாட்டிற்கு வருமா?


காய், கனி கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் மீண்டும் செயல்பாட்டிற்கு வருமா?
x

ஆற்காட்டில் காய்-கனி கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் மீண்டும் செயல்பாட்டுக்கு வருமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ராணிப்பேட்டை

ஆற்காட்டில் காய்-கனி கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் மீண்டும் செயல்பாட்டுக்கு வருமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்டது

கடந்த 2012-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் காய், கனி கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் அன்றைய சட்டமன்ற உறுப்பினர் வி. கே.ஆர். சீனிவாசன் நகர மன்ற தலைவர் புருஷோத்தமன் ஆகியோர்களின் பெரும் முயற்சியால் கொண்டுவரப்பட்ட திட்டமாகும். இந்த திட்டத்தை அன்றைய முதல்வர் ஜெயலலிதா காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இந்தத் திட்டத்தின் மூலம் நகரில் வெளியேற்றப்படும் காய்-கனி கழிவுகளை சேகரித்து நகராட்சி பணியாளர்களை கொண்டு அரவை இயந்திரம் மூலம் அரைத்து அதில் இருந்து நகராட்சிக்குட்பட்ட 3 வார்டுகளில் உள்ள சுமார் 250 தெரு விளக்குகள் எரிய பயன்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தினால் நகராட்சி மின்சார வாரியத்திற்கு செலுத்த வேண்டிய மின் கட்டணம் குறைந்தது. மேலும் காய்கறி கழிவுகள் ஆங்காங்கே கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசி வந்த நிலையில் அதனை சேகரித்து மின்சாரம் தயாரிக்கப்பட்டதால் நகரம் தூய்மையாகவும் காணப்பட்டது. இந்தத் திட்டம் இந்தியாவிலேயே இரண்டாவது இடமாகவும் தமிழகத்திலேயே முதல் இடமாகவும் ஆற்காட்டில் தான் முதல் முதலாக தொடங்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு அன்றைய தினம் பெரும்பாலான மாநிலங்களில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது.

வெளிமாநிலத்தினர்...

இதன் செயல்பாடுகள் குறித்து வெளிமாநிலங்களைச் சேர்ந்த மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த நகராட்சி பொறுப்பாளர்கள் நகர மன்ற தலைவர்கள் நேரில் வந்து பார்வையிட்டு செயல்பாடுகள் குறித்து கேட்டு அறிந்து சென்றனர். இந்தநிலையில் இந்த காய் கனி கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படாமல் பாழடைந்து மூடியே கிடக்கிறது. மேலும் அந்த இடத்தில் பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டப்பட்டு மலை போல் குவிந்து காணப்படுகிறது. மேலும் இந்த திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

வேதனையளிக்கிறது

இது குறித்து ஆற்காடு முன்னாள் நகர மன்ற தலைவர் புருஷோத்தமன் கூறுகையில் 'இந்த திட்டம் ஒரு நல்ல திட்டம் ஆகும். ஆற்காடு நகரில் வெளியேற்றப்படும் தேவையில்லாத காய்-கனி மற்றும் இறைச்சி கழிவுகள் மீன் கழிவுகள் உணவாகங்களில் வெளியேற்றப்படும் கழிவுகள் காய்கறி மார்க்கெட்டுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் ஆகியவற்றைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கப்படும் திட்டமாகும். இந்தத் திட்டத்தினால் ஆற்காடு நகரம் தூய்மையாக காணப்பட்டது. இந்த திட்டத்திற்கு உண்டான அனைத்து வசதிகளையும் அ.தி.மு.க. ஆட்சியிலேயே செய்து முடிக்கப்பட்டது. தற்போதுள்ள தி.மு.க. ஆட்சியில் இந்த திட்டம் செயல்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது வேதனை அளிக்கக்கூடிய விஷயமாகும் மீண்டும் இந்த திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வந்தால் நகரம் தூய்மை அடையும்' என்றார்.

முன்னாள் நகர மன்ற உறுப்பினர் பார்த்தசாரதி கூறுகையில், 'இந்தத் திட்டம் நான் நகர மன்ற உறுப்பினராக இருந்தபோது தொடங்கப்பட்ட திட்டமாகும். இதன் மூலம் என்னுடைய வார்டிலும் ஒரு சில தெருக்களின் விளக்குகள் எரிந்தன. இதன்மூலம் மக்களின் வரிப்பணத்தில் மின் கட்டணம் செலுத்துவது குறையும். இந்தத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்' என்று தெரிவித்தார்.

பழ வியாபாரி ஆதம்:- நான் மொத்தம் மற்றும் சில்லறை விலையில் பழங்களை விற்பனை செய்து வருகிறேன். நாள் ஒன்றுக்கு 100 முதல் 150 கிலோ அழுகிய பழங்களின் கழிவுகள் சேரும் இந்த காய், கனி கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தினால் அன்றாடம் சேரும் கழிவுகளை நகராட்சி பணியாளர்கள் எடுத்துச் சென்றனர். இதனால் கடையும் சுத்தமாக இருந்ததது. வியாபாரமும் நல்ல முறையில் நடைபெற்றது. ஆனால் தற்போது பழங்களின் கழிவுகளை மின்சாரம் தயாரிக்கும் திட்டத்திற்கு எடுத்துச் செல்வதில்லை. நகராட்சி பணியாளர்கள் வரும்பொழுது தான் அதனை அப்புறப்படுத்துகிறோம். அதனால் கடைகளில் ஈ, கொசுக்கள் மொய்க்கின்றன. எனவே மீண்டும் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இதன் மூலம் நகரில் உள்ள அனைத்து காய்-கனி கழிவு பொருட்களும் அப்புறப்படுத்தப்பட்டு நகரமும் சுத்தமாக இருக்கும். இத்திட்டத்தை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.


Next Story