புதுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணப்படுமா?
புதுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணப்படாததால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரும் சிரமப்படுகின்றனர்.
போக்குவரத்து நெருக்கடி
புதுக்கோட்டை நகராட்சி 100 ஆண்டு கண்ட பழமையானதாகும். நகரின் கட்டமைப்பு தொண்டைமான் மன்னர்கள் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்டதாகும். 4-க்கு 4 என 16 வீதிகள் கொண்ட அமைப்பாக பேச்சு வழக்கில் சொல்லப்படுவது உண்டு. நகரில் அப்போதே பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதேபோல மழை நீர் வடிந்து செல்லும் வகையில் கால்வாய்களும், மழை நீரை சேகரிக்கும் வகையில் குளங்களும், கண்மாய்களும் அமைத்திருந்தனர். தற்போதும் அவை காணப்படுகிறது. நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரிப்பு, வாகனங்களின் பயன்பாடுகள் அதிகரிப்பு உள்ளிட்டவை காரணங்களால் புதுக்கோட்டை நகரப்பகுதி தற்போது போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.
கடை வீதிகள்
நகரின் முக்கிய வீதிகள் கீழ ராஜ வீதி, மேல ராஜ வீதி, வடக்கு ராஜ வீதி, தெற்கு ராஜ வீதி ஆகிய வீதிகளாகும். இந்த வீதிகளை சுற்றி தெருக்களும் அமைந்துள்ளது. கடைவீதிகளாக காணப்படும் மேற்கண்ட வீதிகளில் ஜவுளி, நகைகள், பொருட்கள் உள்ளிட்டவை வாங்க மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வருகை தருவது உண்டு. இதேபோல இரு சக்கர வாகனங்கள், கார்கள் போன்ற வாகனங்களும் அதிக அளவில் செல்வது உண்டு. மேல ராஜ வீதி, வடக்கு ராஜ வீதி வழியாக பஸ் போக்குவரத்தும் உண்டு.
இந்த நிலையில் கீழ ராஜ வீதி, மேல ராஜ வீதிகள் இடையே காணப்படும் தெருக்களின் வழியாக இணைக்கப்படும் சந்திப்பு பகுதிகளிலும் ஒரே நேரத்தில் வாகனங்கள் கடந்து செல்லும் போது கடும் போக்குவரத்து நெரில் ஏற்படும். வாகன ஓட்டிகள் பெரும் சிரமங்களுக்கிடையே வாகனங்களில் செல்வது உண்டு. இதேபோல கீழ ராஜ வீதியிலும் வாகன நெரிசல் அதிகம் காணப்படுகிறது. சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்கள், தள்ளுவண்டிகள் உள்ளிட்டவைகளால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
சிக்னல் விளக்குகள்
புதுக்கோட்டை நகரில் முன்பு போக்குவரத்து சிக்னல் விளக்குகள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் காலப்போக்கில் அவை இயக்கப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டன. நகரில் ஒரு வழிப்பாதை என அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டிருந்தாலும் அதன் வழியாக வாகனங்கள் தொடர்ந்து சென்று கொண்டு தான் இருக்கிறது. ஆங்காங்கே அவ்வப்போது போக்குவரத்து போலீசார் நின்று எச்சரித்தாலும் பயன் இல்லை.
போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. கீழ ராஜ வீதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த தடுப்புகள் அமைக்கலாம் அல்லது ஒரு வழிப்பாதையாக அமல்படுத்தலாம் என பொதுமக்கள் கூறுகின்றனர். தற்போது நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகிற நிலையில் முழுமையாக அகற்றி எளிதான போக்குவரத்திற்கு வழி வகுக்கலாம்.
அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அதிகாரிகள் கள ஆய்வு செய்து போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. கடும் போக்குவரத்து நெருக்கடியில் தினமும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என பொறுத்திருந்து பார்ப்போம்.