தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் ஒதுக்கப்படுமா?
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் ஒதுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர்.
தீபாவளி பண்டிகை, இந்துக்களின் முக்கியமான பண்டிகை. தீபாவளி அன்று காலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு, இனிப்பு வகைகளை சாப்பிட்டு, பட்டாசு வெடித்து சந்தோஷமாக கொண்டாடுவார்கள். ஏழை முதல் பணக்காரர்கள் வரை அனைவரும் இந்த பண்டிகையை குடும்பத்துடன் குதூகலத்துடன்கொண்டாடி மகிழ்வார்கள்.
அன்றைய தினத்தில் சிறுவர்கள் கம்பி மத்தாப்பு உள்ளிட்ட ஆபத்து ஏற்படாத பட்டாசுகளை பற்ற வைப்பார்கள். பெரியவர்கள் குண்டு வெடிகள், சரவெடி, ஓலை வெடி போன்ற வெடிகளை வெடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.
பட்டாசு-ஜாலி
தீபாவளி என்றாலே பட்டாசு வெடிப்பது தான் ஜாலி.ஆண்டு முழுவதும் உழைக்கின்ற ஏழைகள் தீபாவளிக்கு பட்டாசு வாங்குவதற்கு ஒரு தொகையை செலவு செய்வார்கள். அது ஒரு அலாதி பிரியம்.
இந்த நிலையில் தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு ஏற்பட்டு சுற்றுச்சூழலுக்கு தீங்கு உண்டாகிறது என்று, தமிழகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடிப்பதற்கு நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதன்படி காலை 6 மணி முதல் 7 மணி வரையில் ஒரு மணி நேரமும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையில் ஒரு மணி நேரமும் என 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
நேர கட்டுப்பாடு
இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை தினத்தன்று கடந்த ஆண்டை போலவே காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
வருகிற 24-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த நேர கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி பொதுமக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
வாழ்வாதாரம் பாதிக்கும்
நெல்லை டவுன் கிருஷ்ணப்பேரியைச் சேர்ந்த சிவனணைந்த பெருமாள் கூறுகையில், 'தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடித்து குடும்பத்துடன் சந்தோஷமாக இருப்பது தான் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அன்று பட்டாசு வெடிப்பார்கள். இதற்கு நேரகட்டுப்பாடு விதிப்பது சரியல்ல.
சிவகாசி பகுதியில் உள்ள தொழிலாளர்கள் ஆண்டு முழுவதும் பட்டாசு உற்பத்தி செய்தாலும் அந்த பட்டாசுகள் தீபாவளி காலங்களில் மட்டுமே அதிகளவில் விற்பனை ஆகிறது. பட்டாசு வெடிப்பதற்கு நேரக்கட்டுப்பாடு விதித்தால் பட்டாசு விற்பனை குறைந்து அந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். எனவே, தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு விதிக்கக்கூடாது' என்றார்.
பாளையங்கோட்டை புதுக்குளத்தை சேர்ந்த வைகுண்டராஜா கூறுகையில், 'பட்டாசு வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகிறது, அதிகப்படியான சத்தம் வருகிறது, இதனால் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். இருந்தபோதும், பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் ஒதுக்கீடு செய்யலாம்' என்றார்.
தென்காசி
தென்காசியில் புத்தக கடை நடத்தி வரும் வியாபாரியான சுரேஷ்:-
பட்டாசு வெடிக்க கூடுதலாக ஒரு மணி நேரம் அனுமதித்து உத்தரவிடலாம். ஏனென்றால் காலை 7 மணிக்கு தான் எல்லோரும் எழுந்திருப்பார்கள். அப்போது பட்டாசு வெடிப்பது சாத்தியமில்லை. இருப்பினும் கூடுதலாக ஒரு மணி நேரத்தை கொடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கிறேன்.
நாள் முழுவதும் பட்டாசு
தென்காசி கூலக்கடை பஜாரை சேர்ந்த பாலசுப்பிரமணியன்:-
தீபாவளி, பொதுமக்களால்வருடத்திற்கு ஒரு நாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக கொண்டாடும் பண்டிகை இதுதான். இதில் பட்டாசு வெடிக்க நேரம் ஒதுக்குவது முறையல்ல. குழந்தைகளின் சந்தோஷம் தான் நமது சந்தோஷம். பட்டாசு வெடிப்பதில் குழந்தைகளுக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படும். எனவே, நாள் முழுவதும் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்க வேண்டும். முந்தைய காலங்களில் இரவு 12 மணி வரையிலும் பட்டாசு வெடித்தது உண்டு. இப்போது காலப்போக்கில் நேரங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
சிறப்பு
தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காட்டை சேர்ந்த பொன்ராம்:- தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இது போதுமானதாக இல்லை, கூடுதலாக நேரம் ஒதுக்கி பட்டாசு வெடிக்க அனுமதி வழங்க வேண்டும். அப்படி அனுமதி வழங்கும் பட்சத்தில் சிறுவர்கள் மிகவும் சந்தோஷத்துடன் பட்டாசு வெடிக்க ஏதுவாக இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பட்டாசு வெடித்து தீபாவளியை சிறப்பாக கொண்டாட முடியாமல் இருந்து வந்தனர். ஆனால், தற்போது கொரோனா குறைந்து உள்ளது, இந்த காலகட்டத்தில் சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் தீபாவளி கொண்டாட ஏதுவாக பொது இடங்களில் பட்டாசு வெடிக்க கூடுதலாக கால அவகாசம் அரசு வழங்கினால் மகிழ்ச்சியாக இருக்கும்.
தூத்துக்குடியை சேர்ந்த ராமசுப்பு:-
தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசுதான் நினைவுக்கு வரும். அப்படிப்பட்ட பண்டிகை நாளில் பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு தேவைதானா? ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் தீபாவளி நாளில் முழுவதும் பட்டாசு வெடிக்க அனுமதிக்கலாம். தீபாவளி பண்டிகை அன்று மட்டுமின்றி, ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள், வரவேற்பு நிகழ்ச்சிகளுக்காக பட்டாசுகள் வெடிக்கப்பட்டு வருகிறது. பட்டாசு வெடிப்பதற்கு நேரக்கட்டுப்பாடு இல்லாமல் தளர்த்துவதே, பண்டிகையை சிறப்பாக்கும். சிறுவர்கள் நாள் முழுவதும் பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கருத்து தெரிவித்தனர்.