போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்படுமா?


போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்படுமா?
x

லெட்சுமாங்குடியில் நீண்டகாலமாக நீடித்து வரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் லெட்சுமாங்குடி கடைவீதியில் உள்ள சாலை நீண்டகாலமாக குறுகலாக இருந்து வருகிறது. இந்த சாலை திருவாரூர், மன்னார்குடி, கொரடாச்சேரி, வடபாதிமங்கலம் செல்லும் நான்கு வழி சாலையையொட்டி இருப்பதால் இதன் வழியாக அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி-கல்லூரி வாகனங்கள், கார், வேன், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள், கனரக வாகனங்கள், நோயாளிகளை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்சுகள், அரசுத்துறை சார்ந்த வாகனங்கள் என தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும், இங்கு கடைவீதி உள்ளதால் பொதுமக்களும் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

போக்குவரத்து நெரிசல்

இந்த கடைவீதி சாலை மிகவும் குறுகலாக இருப்பதால், எதிர் எதிரே வரும் வாகனங்கள் கடந்து செல்ல முடியாமல் பல மணி நேரம் ஸ்தம்பித்து நின்று விடுகின்றன. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும், அவசர நோயாளிகளை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்சுகள், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர், கூத்தாநல்லூர் அரசு ஆஸ்பத்திரி, தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகம் செல்வோர் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் அவலநிலை நீடித்து வருகிறது.

தீர்வு காணப்படுமா?

பல ஆண்டுகளாக இந்த போக்குவரத்து நெரிசல் நீடித்து வருவதாகவும், இதனை தவிர்க்க ஒரு வழி பாதை ஏற்படுத்த வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் அதற்கான நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் ஆதங்கப்படுகின்றனர். ஆகவே, லெட்சுமாங்குடி கடைவீதியில் நீண்டகாலமாக நீடித்து வரும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என்று வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


Next Story