பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக தென்மாவட்டங்களுக்கு 'வந்தே பாரத்' வருமா?-ரெயில் பயணிகள், பொதுமக்கள் கருத்து


பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக தென்மாவட்டங்களுக்கு ‘வந்தே பாரத்’ வருமா இயக்கப்பட வேண்டும் என்று ரெயில் பயணிகள், பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சேலம்

தபால்துறை, தொலைதொடர்பு துறை, ரெயில்வே துறை போன்ற அன்றாடம் நம்மோடு பயணிக்கும் துறைகள் எல்லாம் ஆங்கிலேயர்கள் உருவாக்கி போனது. கடந்த 76 ஆண்டுகளில் அந்தத் துறைகளை நாம் எந்த அளவில் நவீனமயமாக்கி இருக்கிறோம் என்று பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது.

குறிப்பாக ரெயில்வே துறையை எடுத்து கொண்டால் நீராவி என்ஜினில் ரெயிலை இயக்கிய பிறகு டீசல், மின்சாரம் என வளர்ந்து தற்போது நடுத்தர வேகத்தில் செல்லும் வந்தே பாரத் ரெயில்கள், டிரைவர்களே இல்லாமல் இயங்கவிருக்கும் நவீன ரெயில் என்ற அளவிற்கு உயர்ந்து வருகிறோம். விரைவில் புல்லட் ரெயில்களும் இந்தியாவில் இயக்கும் நிலை ஏற்படும்.

வந்தே பாரத்

வந்தே பாரத் என்ற பெயரில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த ரெயில் இந்திய நகரங்களுக்கு இடையே நடுத்தர வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. இந்தியாவில் முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கும் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழான முன்னெடுப்பில், சென்னை பெரம்பூரில் உள்ள ரெயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலையில் 18 மாத காலத்தில் தயாரிக்கப்பட்டது. இந்திய ரெயில்வே வரலாற்றில் இது ஒரு மைல்கல் ஆகும். 1,148 இருக்கைகள் கொண்ட வந்தே பாரத் ரெயில்களில் 2 உயர் வகுப்பு பெட்டிகளும், 14 சாதாரண வகை பெட்டிகளும் உள்ளன. இவை அனைத்தும் குளிர்சாதன வசதி கொண்டவையாகும். இந்த ரெயிலில் என்ஜின் என்று தனியாக இருப்பதில்லை. டிரைவர்களுக்கு என்று ஒரு சிறிய அறை (கேபின்) மட்டுமே இருக்கும்.

ஒவ்வொரு பெட்டிகளுக்கு கீழேயும் என்ஜின் இருப்பதால் சீரான வேகம் அதிகரிப்பு, சீரான வேகம் குறைப்பு போன்றவை முறையாக நடைபெறும். இதனால் பெட்டிகளில் பயணம் செய்யும் போது அதிவேகத்தில் சென்றாலும் அதிர்வோ, குலுங்கலோ எதுவும் இல்லாமல் வீட்டில் இருப்பது போன்ற உணர்வை பயணத்தின் போது பயணிகள் உணரமுடியும். அதேநேரம் என்ஜின் டிரைவர் கேபினில் இருந்து கடைசி பெட்டியில் உள்ள ரெயில் கார்டு அறை வரை பயணிகள் செல்ல முடிகிறது.

சென்னை-கோவை

சென்னை- மைசூரு இடையே இந்த ரெயில் ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில் கோவை- சென்னை இடையே வருகிற 8-ந்தேதி வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் நரேந்திரமோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் தென் மாவட்டங்களுக்கு குறிப்பாக சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கும், பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக நாகர்கோவிலுக்கும் வந்தே பாரத் ரெயிலை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து இருக்கிறது.

இதுபற்றி பல்வேறு தரப்பினர் வெளியிட்டிருக்கும் கருத்துகள் வருமாறு:-

சென்னை- கன்னியாகுமரி

சென்னை ஆவடியைச் சேர்ந்த ஐடா செல்லம்மாள்:- நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன நிலையில் 75 வாரங்களில் 75 வந்தே பாரத் ரெயில்கள் பல்வேறு பகுதிகளை இணைக்கும் வகையில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட ரெயில்வே பட்ஜெட்டிலும், 400 புதிய வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. அதன்படி படிப்படியாக நாடு முழுவதும் வந்தே பாரத் ரெயில்கள் தொடங்கி வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கும், வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட வேண்டும். இதற்கு தெற்கு ரெயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேலம் ரெயில்வே கோட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் டாக்டர் பி.அத்தியண்ணா:-

மத்திய அரசின் வந்தே பாரத் ரெயில் சேவை பொதுமக்களுக்கு மிகவும் சவுகரியமானதாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. சென்னை- கோவை வந்தே பாரத் ரெயில் சேவையை சேலம் மாவட்ட உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கம் பாராட்டி வரவேற்கிறது. அதேபோல், தென் மாவட்ட மக்களுக்கு வந்தே பாரத் ரெயிலை இயக்க வேண்டும். குறிப்பாக பெங்களூரு- திருச்சி, பெங்களூரு- மதுரை, பெங்களூரு- கன்னியாகுமரி, சென்னை- கொச்சின் போன்ற வழித்தடங்களிலும் வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும். இதுபோன்ற ரெயில் சேவையை மக்களுக்கு மத்திய அரசு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

தொழில் வளர்ச்சி

சேலத்தை சேர்ந்த கண்ணன்:- தென் மாவட்டங்களை சேர்ந்த ஐ.டி. நிறுவனங்களில் வேலை பார்ப்போர் 75 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் பெங்களூருவில் வேலை பார்த்து வருகிறார்கள். இதன் காரணமாக தென் மாவட்டங்களுக்கும், பெங்களூரூவுக்கும் இடையே தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் பயணித்து வருகின்றனர். இந்த நகரங்களுக்கு இடையே போக்குவரத்து வசதி மிகவும் குறைவாகவே உள்ளது. இதனால் தொழில் வளர்ச்சி மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளன. எனவே, தென் மாவட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டு பெங்களூருவில் இருந்து ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல் வழியாக தென் மாவட்டங்களுக்கு அதாவது நாகர்கோவில் வரை வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும்.

தென் மாவட்டங்களுக்கு...

சேலம் அமானி கொண்டலாம்பட்டி ஊராட்சி கரட்டூரை சேர்ந்த சித்துராஜ்:- பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் புதிதாக வந்தே பாரத் ரெயில் இயக்கினால் அனைத்து தரப்பு மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக மதுரை, திருச்செந்தூர், ராமேஸ்வரம், கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் உள்ள வழிபாட்டு தலங்களுக்கும், சுற்றுலா தலங்களுக்கும் செல்வதற்கு இந்த வழித்தடம் பயனுள்ளதாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் தென் மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கானோர் பெங்களூரு, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்கும் இந்த வழித்தடத்தின் வாயிலாக வந்தே பாரத் ரெயில் இயக்கும்போது, அது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

போதிய ரெயில் வசதி இல்லை

ஓமலூரை சேர்ந்த ராஜாங்கம்:- தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் எனது சொந்த ஊர். ஆனால் ஓமலூரில் 20 ஆண்டுகளுக்கு மேலாக மளிகை கடை நடத்தி வருகிறேன். கோவில் திருவிழா மற்றும் உறவினர்கள் வீட்டு விசேங்களுக்கு அடிக்கடி ஊருக்கு செல்ல வேண்டியுள்ளது. தென் மாவட்ட மக்கள் தமிழகம் முழுவதும் பெருநகரங்களில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் போதிய ரெயில் வசதி இல்லை. சென்னை- கோவை இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுவது வரவேற்கத்தக்கது. அதேபோல், தொழில் வளர்ச்சியில் மிகவும் பின்தங்கி உள்ள தென் மாவட்டங்களும் வளர்ச்சி அடைவது அவசியமாகும். எனவே, பெங்களூரு-நாகர்கோவில் அல்லது கோவை-நாகர்கோவில் இடையே வந்தே பாரத் ரெயிலை இயக்க வேண்டும். இதன்மூலம் தென் மாவட்ட பயணிகள் அதிகம் பலனடைவார்கள். ரெயில்வே வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்தும் மாறும்

பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலை அதிகாரிகள் கூறும் போது, 'நவீன வசதிகள் கொண்ட வந்தே பாரத் பெயர் கொண்ட 16 பெட்டிகளுடன் ஒரு ரெயில் தயாரிக்க ரூ.110 கோடி செலவாகிறது. தொடர்ந்து தயாரிக்கும் போது, தயாரிப்புச் செலவுகள் இன்னும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்வதைவிட இந்தியாவில் தயாரித்தால் 40 சதவீதம் விலை குறைவாகும். வரும் காலங்களில் இந்தியாவில் ஓடும் அனைத்து ரெயில்களும் வந்தே பாரத் ரெயில்களாக மாற்றப்படும். குறிப்பாக பெருநகரங்களுக்கு இடையே ஓடும் சதாப்தி மற்றும் நீண்ட தூரம் செல்லும் ராஜ்தானி ஆகிய ரெயில்களும் வந்தே பாரத் ரெயில்களாக மாற்றும் திட்டமும் உள்ளது. தற்போது வந்தே பாரத் ரெயில்களில் இருக்கைகள் மட்டுமே இருக்கின்றன. வரும் காலங்களில் படுக்கை வசதியும் செய்து தரப்பட உள்ளது' என்று அதிகாரிகள் கூறினார்கள்.

12 வந்தே பாரத் ரெயில்கள்


வந்தே பாரத் ரெயிலின் முதல் பயணத்தை கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 15-ந்தேதி டெல்லி- வாரணாசி இடையே பிரதமர் நரேந்திரமோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து டெல்லி-வாரணாசி, டெல்லி - காஷ்மீரில் உள்ள மாதா வைஷ்ணதேவி கட்ரா, மும்பை- குஜராத் காந்திநகர், டெல்லி - இமாசல பிரதேச மாநிலம் ஆம்ப் ஆண்டவுரா, சென்னை- மைசூரு, பிலாஸ்பூர்- நாக்பூர், ஹவுரா- டெல்லி, விசாகப்பட்டினம்- செகந்திராபாத், மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் முனையம்- சோலாப்பூர், டெல்லி- ஜெய்பூர் என்று 11 நகரங்களுக்கு இடையே வந்தே பாரத் இயக்கப்படுகிறது. கோவை - சென்னை இடையே 12-வது வந்தே பாரத் ரெயில் சேவையை வருகிற 8-ந்தேதி பிரதமர் நரேந்திரமோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

சென்னை- கோவை 6 மணி நேரம் பயணம்

கோவை - சென்னை இடையே உள்ள 495.28 கி.மீ. தூரத்தை இந்த வந்தே பாரத் ரெயில் 6 மணிநேரம் 10 நிமிடங்களில் சென்றடைகிறது. குறிப்பாக காலை 6 மணிக்கு கோவையில் புறப்படும் இந்த ரெயில் மதியம் 12.10 மணிக்கு சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் வந்தடைகிறது. பின்னர், மதியம் 2.20 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு கோவை சென்றடைகிறது. இந்த ரெயில் புதன்கிழமையை தவிர்த்து வாரத்தின் மற்ற அனைத்து நாட்களும் இயங்குகிறது.

கோவை - சென்னை வழித்தடத்தில் உள்ள திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்கிறது. பொதுவாக இந்த வழித்தடத்தில் விரைவு ரெயில்கள் பயண நேரம் 7½ மணிநேரம் எனவும், சதாப்தி ரெயில் பயண நேரம் 7 மணிநேரமாகவும் உள்ளது. அப்படி இருக்க இந்த வந்தே பாரத் ரெயில் 6 மணிநேரத்தில் பயணத்தை நிறைவு செய்கிறது என்று தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறினர்.


Next Story