பதக்கங்களை குவிக்கும் திருப்பூர் அரசு பள்ளி மாணவி


பதக்கங்களை குவிக்கும் திருப்பூர் அரசு பள்ளி மாணவி
x

திருப்பூரில் அரசு பள்ளி மாணவி அர்ச்சணா, மாநில, மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில் பதக்கங்களை குவித்து சாதனை படைத்து வருகிறார்.

திருப்பூர்

திருப்பூரில் அரசு பள்ளி மாணவி அர்ச்சணா, மாநில, மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில் பதக்கங்களை குவித்து சாதனை படைத்து வருகிறார்.

அரசு பள்ளி மாணவி

திருப்பூர் வலையங்காட்டை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 43). பனியன் நிறுவன ஊழியர். இவருடைய மனைவி சத்யா (37). இவர்களின் மூத்த மகள் அர்ச்சணா (15). 2-வது மகள் ஆராதனா (12). அர்ச்சணா திருப்பூர் குமார் நகர் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். நீச்சல் போட்டியில் இவர் பல்வேறு சாதனைகளை தனதாக்கியுள்ளார்.

கடந்த வாரம் திருப்பூரில் நடந்த முதல்-அமைச்சர் கோப்பைக்கான நீச்சல் போட்டியில் 5 பிரிவுகளில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். பதக்கங்களை குவிப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கும் சாதனை மாணவியை கலெக்டர் வினீத், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் ஆகியோர் பாராட்டினார்கள்.

இதுகுறித்து மாணவி அர்ச்சணா கூறியதாவது:-

7-ம் வகுப்பு படிக்கும் போது நீச்சல் போட்டியில் ஆர்வம் ஏற்பட்டதால் எனது தந்தை என்னை 15 வேலம்பளையம் டிரிக் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் சேர்த்தார். அங்கு தொடர்ந்து நீச்சல் பயிற்சி பெற்றேன். மாவட்ட, மாநில அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை பெற்றேன். கடந்த மாதம் தேசிய அளவில் திருவனந்தபுரத்தில் நடந்த போட்டிகளில் பங்கேற்றேன். இந்த மாதம் முதல் வாரத்தில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின விழாவையொட்டி நடைபெற்ற நீச்சல் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் வென்று மாநில அளவிலான போட்டிக்கு தேர்வானேன்.

தேசிய அளவில் சாதிக்க வேண்டும்

பின்னர் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் 50 மீட்டர், 100 மீட்டர், 200 மீட்டர் ஆகிய 3 பிரிவுகளிலும் பங்கேற்று அனைத்திலும் முதலிடம் வென்றேன். எனது பள்ளி தலைமை ஆசிரியை காயத்ரி, உடற்கல்வி ஆசிரியை செல்வி ஆகியோர் எனக்கு தரும் ஊக்கமும், எனது குடும்பத்தினர் அளிக்கும் நம்பிக்கையும் என்னை நீச்சல் போட்டியில் பதக்கங்களை வெல்ல வைக்கிறது. விரைவில் தேசிய அளவில் சாதித்து ஒலிம்பிக் போட்டிகளுக்கு செல்ல வேண்டும் என்பதே எனது இலக்கு.

இவ்வாறு அவர் கூறினார்.

அர்ச்சணாவின் தந்தை ஜெயபால் கூறும்போது,'மாநில அளவில் 35 பதக்கங்களுக்கு மேல் அர்ச்சணா பெற்றுள்ளார். மாவட்ட அளவில் 50-க்கும் மேற்பட்ட நீச்சல் போட்டிகளில் வென்றுள்ளார். தினமும் 2 மணி நேரம் பயிற்சி மேற்கொள்வார். 15 வேலம்பாளையத்தில் உள்ள டிரிக் அகாடமியை சேர்ந்த சிவக்குமார் ஒத்துழைப்பு தருகிறார். பயிற்சியாளர் அகில், அளிக்கும் உத்வேகத்தால் அர்ச்சணாவை அடுத்த கட்டத்துக்கு முன்னேற்ற நாங்கள் முயற்சிக்கிறோம். திருப்பூர் ரோட்டரி பிரைட் அமைப்பினர் உதவுகிறார்கள்.' என்றார்.


Related Tags :
Next Story