நடுரோட்டில் மின் கம்பத்துடன்தார்சாலை அமைக்க முயற்சி
நடுரோட்டில் மின் கம்பத்துடன் தார்சாலை அமைக்க முயற்சிக்கப்படுகிறது.
ஈரோடு வில்லரசம்பட்டி நால்ரோடு அருகில் உள்ள செங்காளியப்பன் நகரில் புதிய தார்சாலை அமைப்பதற்கான பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இதற்காக சாலை செப்பனிடப்பட்டு ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன. இந்த நிலையில் அங்கு நடுரோட்டில் உள்ள மின்கம்பம் அகற்றப்படாமலேயே புதிய தார் சாலை அமைக்கும் முயற்சி நடக்கிறது. எனவே மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி 10-வது வார்டு கவுன்சிலர் குமரவேல் கூறுகையில், "நடுரோட்டில் உள்ள மின் கம்பத்தை மாற்றி அமைப்பதற்காக சாலையோரம் புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மின் கம்பிகள் முறையாக மாற்றி அமைக்கப்படாததால் சாலை அமைக்கும் பணி பாதியிலேயே நிற்கிறது. மின்வாரிய அதிகாரிகள் மின் கம்பிகளை முறையாக மாற்றி அமைத்த பிறகு நடுரோட்டில் உள்ள மின்கம்பம் அகற்றப்படும். அதன் பிறகு புதிய தார் சாலை அமைக்கப்படும்", என்றார்.