குண்டும், குழியுமான சாலைகளால் வாகன ஓட்டிகள் அவதி


குண்டும், குழியுமான சாலைகளால்   வாகன ஓட்டிகள் அவதி
x

குண்டும், குழியுமான சாலைகளால் வாகன ஓட்டிகள் அவதி

திருப்பூர்

திருப்பூர்,

ஒவ்வொரு மாவட்டத்திலும் பொருளாதார தேவைகளை நிர்ணயிப்பதில் போக்குவரத்துத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த போக்குவரத்துத்துறை வளர்ச்சி அடைவதும், வீழ்ச்சி அடைவதும் அங்குள்ள சாலைகளை பொறுத்து உள்ளது. திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை அதிகமான பொதுமக்கள் வசித்து வருவதால் அதிகளவில் வாகன போக்குவரத்து உள்ளது.

குண்டும், குழியுமான சாலை

குறிப்பாக ஜவுளி, பனியன் தொழிற்சாலைகள், விசைத்தறிக்கூடங்கள் போன்ற தொழிற்சாலைகள் அதிகம் உள்ளதால் பல்வேறு பகுதிகளிலிருந்து கனரக வாகனங்கள் இங்கே வேலைநிமித்தமாக வந்து செல்கின்றன். அதேபோல் பள்ளி, கல்லூரிக்கு செல்வதற்கு, வேலைக்கு செல்வதற்கு இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர். மேலும் அரசு, தனியார் பஸ்கள் போன்ற வாகனங்களும் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் இங்கு உள்ள பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாக, மண்சாலையாக, ஜல்லி கற்கள் பெயர்ந்து மோசமான நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவசர தேவைக்காக, வேலைக்காக, பள்ளி, கல்லூரிக்காக செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.

இதுகுறித்து ெபாதுமக்கள் தங்கள் கருத்துகளை கூறியதாவது:-

கருப்பகவுண்டம்பாளையம் சாலை

கணேசமூர்த்தி, (கல்லாங்காடு):-

நான் 10 வருடங்களாக இந்த பகுதியில் வசித்து வருகிறேன். பல்லடம் ரோடு தமிழ்நாடு தியேட்டர் பிரிவு அருகில் கருப்பகவுண்டம்பாளையம் செல்லும் சாலை ஜல்லிகற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலை 5 ஆண்டுகளாக இப்படியே தான் கிடக்கிறது. இதனால் இந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே மோசமான நிலையில் உள்ள சாலையை தார்ச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மகேஸ்வரன், (பனியன் நிறுவன தொழிலாளி):-

கருப்பகவுண்டம்பாளையம் செல்லும் சாலை மெயின் ரோடாக இருப்பதால் அதிகமான வாகன ஓட்டிகள் இந்த சாலை வழியாக மிகவும் கஷ்டப்பட்டு சென்று வருகின்றனர். இந்த சாலையில் தற்போது கால்வாய் அமைப்பதற்காக சிறிய பாலம் கட்டும் பணி மந்தமாக நடைபெறுகிறது. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை தார்ச்சாலையாகவும், இந்த கால்வாய் கட்டும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்.

தார்ச்சாலை

ஆனந்தகுமார், (போட்டோ ஸ்டூடியோ உரிமையாளர்):-

நான் இந்த பகுதியில் 12 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். கருப்பகவுண்டம்பாளையம் முதல் தென்னம்பாளையம், தாராபுரம் போன்ற இடங்களுக்கு செல்லும் இந்த தார்ச்சாலை ஜல்லி கற்கள் பெயர்ந்து மண்சாலையாக காட்சியளிக்கிறது. இங்கு 30 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பாதாள சாக்கடை குழாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட தார்ச்சாலை அதன்பிறகு ஒரு ஆண்டுகளுக்கு மேலாகியும் சீரமைக்கப்படாததால் மோசமான நிலையில் உள்ளது. அவசர உதவிக்காக செல்லும் 108 ஆம்புலன்சு கூட இந்த சாலையில் செல்ல பெரும் சிரமப்படுகிறது. மோசமான நிலையில் உள்ள சாலையினால் விபத்துகள் ஏற்படுகிறது. அருகில் பள்ளிகள் உள்ளதால் குழந்தைகள் செல்வதற்கும் பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. எனவே இந்த சாலைகளை விரைந்து சீரமைத்து தார்ச்சாலையாக அமைக்க வேண்டும்.

லீலாவதி, (குடும்ப தலைவி):-

இந்த பகுதி சாலை மேடு, பள்ளமாக இருக்கிறது. இதனால் இந்த சாலையில் செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. குறிப்பாக மழை பெய்யும்போது இந்த சாலையில் உள்ள குண்டும், குழி தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த சாலையை தார்ச்சாலை மாற்றி கொடுத்தால் வாகன ஓட்டிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

விரைந்து முடிக்க வேண்டும்

ஈஸ்வரி, (தையல் தொழிலாளி):-

கல்லாங்காடு முதல் வீரபாண்டி வரை செல்லும் சாலை பல்லாங்குழியாக காட்சியளிக்கிறது. இந்த பகுதியில் வாகனம் ஓட்டுவது கஷ்டமாக உள்ளது. குறிப்பாக இரவு நேரத்தில் இந்த பகுதியில் செல்வது கடினம். ஏனென்றால் இந்த சாலையில் ஆபத்தான குழிகள் உள்ளது. இதனை அறியாத வாகன ஓட்டிகள் இந்த குழியில் விழுந்து பலத்த காயம் அடைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை சீரமைத்து கொடுத்தால் நன்றாக இருக்கும்.

இவ்வாறு பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

இதேபோல் காலேஜ் ரோடு அணைப்பாளையம் பகுதி சாலை குண்டும், குழியுமாகி தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இந்த குழியை கவனிக்காமல் வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. இதுபோன்ற சாலைகளால் வாகன ஓட்டிகள் கீேழ விழுவதும், பலத்த காயம் அடைவதும், தொடர்கதையாகி உள்ளது.

இந்தநிலையில் திருப்பூரில் 514 சாலைகளை சீரமைப்பதற்கு ரூ.76¼ கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் சில சாலைகளை சீரமைப்பதற்கு அதிகாரிகள் மேற்கொள்ளும் ஆய்வு பணியை விரைந்து முடித்து, விரைவில் திருப்பூரில் உள்ள அனைத்து சாலைகளையும் தார்ச்சாலையாக மாற்றி சீரமைத்து கொடுத்தால் நன்றாக இருக்கும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.



Next Story