நாடாளுமன்ற தேர்தலில் தேசிய கட்சியுடன் இணைந்து போட்டி


நாடாளுமன்ற தேர்தலில் தேசிய கட்சியுடன்  இணைந்து போட்டி
x
தினத்தந்தி 20 Nov 2022 12:15 AM IST (Updated: 20 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிட உள்ளதாக டி.டி.வி. தினகரன் கூறினார்.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

நாடாளுமன்ற தேர்தலில் தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிட உள்ளதாக டி.டி.வி. தினகரன் கூறினார்.

விவசாயிகளுக்கு ஆறுதல்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள எடமணல், வேட்டங்குடி, நல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நேரில் பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். நல்லூர் கிராமத்தில் பாதிக்கப்பட்ட நெற்பயிரை பார்வையிட்ட அவர் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-மழை பாதிப்புக்கு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும். அப்போது தான் மக்கள் பாதிப்பில் இருந்து மீண்டு வருவார்கள். மழையால் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. எனவே ரேஷன் கார்டுக்கு ரூ.3,000 வீதம் நிவாரணம் வழங்க வேண்டும்.

தலைமை இல்லை

இன்றைக்கு அ.தி.மு.க.வில் தலைமை இல்லை. பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் கையெழுத்து போட்டால் தான் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த முடியும் என்ற நிலையில், எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்து வருகிறார். ஜெயலலிதாவுக்கும் துரோகம் செய்யும் விதமாக பொதுச்செயலாளர் பதவியை அபகரித்தார். தற்போது இடைக்கால பொதுச் செயலாளர் என்று கூட சொல்ல முடியாத நிலைமையில் தான் அவர் உள்ளார்.முதல்-அமைச்சர் பதவியில் இருக்க 4 ஆண்டுகள் உதவி செய்த மத்திய அரசுக்கும் அவர் துரோகம் செய்யும் விதமாக நடந்து கொள்கிறார் என்பது தான் உண்மை. பிரதமர் மற்றும் உள்துறை மந்திரியை பார்க்க தேவையில்லை என கூறி, மடியில் கனத்தை வைத்துக்கொண்டு பழனிசாமி அகங்காரத்துடன் செயல்படுவது வேடிக்கையாக இருக்கிறது.

நினைத்துப்பார்க்க வேண்டும்

ஜனநாயக நாட்டில் தங்களிடம் வைத்துள்ள பண பலத்தை வைத்துக்கொண்டு கட்சியை கைப்பற்றி விட முடியும், ஆட்சியை கைப்பற்றி விடலாம் என்று நினைத்தால் காலமும், மக்களும் முடிவு செய்வார்கள். வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஓரணியில் இணைந்து தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிடுவோம்.இரட்டை இலை சின்னத்தை காட்டி மக்களையும், தொண்டர்களையும் ஏமாற்றி வந்த பழனிசாமி, அந்த சின்னம் முடக்கப்பட்டால் தன் நிலைமை என்னவாகும் என்று நினைத்துப்பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.அப்போது துணை பொதுச்செயலாளர் ரெங்கசாமி, மாவட்ட செயலாளர் பாரிவள்ளல் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

நிவாரண உதவிகள்

செம்பனார்கோவில் அருகே அப்பராஜபுரம்புத்தூர் கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை டி.டி.வி.தினகரன் நேரில் பார்வையிட்டார். அப்போது அவர் 200 பேருக்கு 5 கிலோ அரிசி, மளிகை பொருட்கள், காய்கறி மற்றும் போர்வை உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போது மாவட்ட செயலாளர் பாரிவள்ளல், ஒன்றிய செயலாளர்கள் மோகன், தங்கராஜ், ராமகிருஷ்ணன் மற்றும் பலர் உடன் இருந்தனர். முன்னதாக நிவாரண பொருட்களை பெற 100-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் ஒரு சிலர் மயக்கம் அடைந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story