சென்னையில் நீட் தேர்வு எழுத வந்த மாணவிக்கு நேர்ந்த அவலம்: உள்ளாடையை அகற்ற சொன்னதால் சர்ச்சை
சென்னையில் நேற்று நீட் தேர்வு மையத்தில் சோதனையின் போது மாணவி ஒருவரின் உள்ளாடையை அகற்றச்சொன்னதாக சர்ச்சை எழுந்துள்ளது.
சென்னை,
நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி ஆகியவற்றில் இளநிலை படிப்புகளுக்கும், கால்நடை மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இளநிலை படிப்புகளுக்கும், ராணுவ நர்சிங் கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் படிப்புக்கும் 'நீட்' நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
அவ்வாறு தேர்ச்சி பெறும் மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் மேற்சொன்ன மருத்துவம் சார்ந்த படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023-24-ம் கல்வியாண்டு மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு குறித்த அறிவிப்பை, தேர்வை நடத்தக்கூடிய தேசிய தேர்வு முகமை வெளியிட்டது.
இந்த தேர்வை எழுதுவதற்காக நாடு முழுவதும் 11 லட்சத்து 84 ஆயிரத்து 502 மாணவர்கள், 9 லட்சத்து 2 ஆயிரத்து 930 மாணவிகள், 13 திருநங்கைகள் என மொத்தம் 20 லட்சத்து 87 ஆயிரத்து 445 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 95 ஆயிரத்து 824 மாணவிகள், 51 ஆயிரத்து 757 மாணவர்கள் என மொத்தம் ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 581 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
அவர்களுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டு, நாடு முழுவதும் 499 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, நேற்று தேர்வு நடந்தது. தேர்வை எழுதும் மாணவ-மாணவிகள் பிற்பகல் 1.30 மணிக்குள் தேர்வு மையத்துக்குள் வர அறிவுறுத்தப்பட்டனர். அதன்படி, தேர்வு மையத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன.
அதன்படி, மாணவ-மாணவிகள் தீவிர பரிசோதனைக்கு பிறகே தேர்வு மையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். மாணவிகளை பொறுத்தவரையில் ஆபரணங்கள் அணிந்து வர முற்றிலும் தடை விதிக்கப்பட்டது. இதனால் மாணவிகள் அணிந்து வந்த காதணி, மூக்குத்தி, மோதிரம், சங்கிலி, கொலுசு போன்ற ஆபரணங்களை கழற்றி பெற்றோர் வசம் ஒப்படைத்துவிட்டு சென்றனர்.
இதேபோல், தலைமுடி விரித்தபடி இருந்தால் மட்டுமே மாணவிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. சடைபின்னலுடன் வந்த மாணவிகளை வலுக்கட்டாயமாக முடியை விரிக்க சொன்ன நிகழ்வும் நடந்தது. இதனால் மாணவிகள் தலைவிரி கோலத்துடன் தேர்வு அறைக்குள் சென்று தேர்வை எழுதினார்கள். மேலும் தடிமனான காலணி அணிந்து வந்தவர்களையும் அனுமதிக்கவில்லை.
மாணவர்களை பொறுத்தவரையில் ஷூ அணிந்து வந்தவர்கள், 'பெல்ட்' அணிந்து வந்தவர்கள், பெரிய பட்டனுடன் கூடிய ஆடை அணிந்துவந்தவர்கள், கை மற்றும் கழுத்தில் கயிறு அணிந்திருந்தவர்களை திருப்பி அனுப்பினர். பின்னர், அவர்கள் அதை கழற்றிவிட்டு, சரியாக வந்த பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இவ்வாறு கடும் கட்டுப்பாடுகளுக்கு இடையே நீட் தேர்வு நேற்று நாடு முழுவதும் நடந்தது.
இந்தநிலையில், சென்னையில் நேற்று நீட் தேர்வு மையத்தில் சோதனையின் பொது மாணவி ஒருவரின் உள்ளாடையை அகற்றச்சொன்னதாக சர்ச்சை எழுந்துள்ளது.
மயிலாப்பூரில் தனியார் பள்ளி ஒன்றில் நடைபெற்ற நீட் தேர்வின் போது மாணவ-மாணவிகள் தீவிர சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர்.
ஒரு மாணவியை சோதனையிட்டபோது அவர் அணிந்திருந்த ஆடையில் இருந்து ஒலி எழுந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாணவியின் உள்ளாடையின் மீது சந்தேகம் எழுந்துததால் சோதனையில் ஈடுபட்ட அலுவலர்கள் உள்ளாடையை அகற்ற அலுவலர்கள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. வேறு வழியின்றி அந்த மாணவி உள்ளாடையை அகற்றிய பிறகு தான் மாணவி நீட் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மயிலாப்பூரில் தனியார் பள்ளி தேர்வு மையத்தில் சோதனையில் ஈடுபட்ட அலுவலர்கள் அகற்றசொல்லியதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார்கள் எழுந்துள்ளது.