மூதாட்டியை ஏமாற்றி 4 பவுன் நகை, பணம் திருடிய பெண் கைது


மூதாட்டியை ஏமாற்றி 4 பவுன் நகை, பணம் திருடிய பெண் கைது
x

மூதாட்டியை ஏமாற்றி 4 பவுன் நகை, பணம் திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை

மூதாட்டி

திருச்சி மாவட்டம், மணிகண்டம் அருகே உள்ள ஓலையூரை சேர்ந்தவர் சவுரியம்மாள் (வயது 70). இவர் வீட்டில் தனியாக இருக்கும் போது இவரது வீட்டின் அருகே கட்டிட வேலைக்கு வந்திருந்த ஒரு பெண் சவரியம்மாளிடம் அடிக்கடி பேசிக் கொண்டிருப்பாராம். அதேபோல் கடந்த 17-ந் தேதி மதியம் அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மூதாட்டியிடம் அப்பெண் பேசிக் கொண்டிருந்தபோது நான் குளிக்க செல்கிறேன் என்று மூதாட்டி கூறியுள்ளார்.

அப்போது அந்த பெண் குளிக்க செல்லும் போது கழுத்தில் காதில் உள்ள நகைகளை கழட்டி வைத்து குளித்தால் தான் நன்கு குளிக்க முடியும் என்று கூறியதால் மூதாட்டி தனது கழுத்தில் அணிந்திருந்த அட்டியல், காதில் அணிந்திருந்த தோடு உள்பட 4 பவுன் தங்க நகைகளை கழட்டி தலையணைக்கு அடியில் வைத்து விட்டு குளிக்க சென்றுள்ளார்.

நகை, பணம் திருட்டு

இதையடுத்து, அந்த பெண் தலையணைக்கு அடியில் வைத்திருந்த 4 பவுன் தங்க நகை மற்றும் பீரோவில் வைத்திருந்த ரூ.6 ஆயிரம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார். மூதாட்டி குளித்துவிட்டு வீட்டுக்குள் வந்து பார்த்தபோது அங்கு அப்பெண் இல்லை. பின்னர் தலையணைக்கு அடிகள் தான் வைத்திருந்த நகைகளை பார்த்தபோது நகைகள் மாயமாகி இருந்தது. அதேபோல் பீரோவில் வைத்திருந்த பணமும் மாயமாகி இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதுகுறித்து தனது மருமகளிடம் கூறினால் திட்டுவார் என்று நினைத்துக் கொண்டு அவர் இதுபற்றி யாரிடம் சொல்லாமல் இருந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மூதாட்டியின் மருமகள் மைக்கேல்மேரி தனது மாமியாரிடம் உங்களது அட்டியல் தோடு நகை எங்கே என்று கேட்ட போதுதான் சம்பவத்தன்று மர்ம பெண் நகையைத் திருடிச் சென்றது குறித்து தெரிவித்துள்ளார். பின்னர் மைக்கேல்மேரி இதுகுறித்து மணிகண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

சிறையில் அடைப்பு

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜஸ்டின் திரவியம் வழக்குப்பதிவு செய்து நகையை திருடி சென்ற பெண்ணை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வந்தார். விசாரணையில் சித்தாள் வேலைக்கு வந்த இடத்தில் மூதாட்டியிடம் நூதன முறையில் ஏமாற்றி தங்க நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றது புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா, திம்மையம்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜகோபால் மனைவி ரேகா (30) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அப்பெண்ணை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 4 பவுன் தங்க நகை மற்றும் ரூ.6 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்த ரேகாவை திருச்சி ஜே.எம்.4 கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story