3 பட்டதாரிகளிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்த பெண் கைது
3 பட்டதாரிகளிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டம், துறையூர் ஒக்கரையை சேர்ந்தவர் அழகேசன் (வயது 22). பட்டதாரியான இவரிடம், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஸ்ரீரங்கம் தாலுகா எட்டரை பகுதியை சேர்ந்த திபில்யா (31) என்ற பெண் அறிமுகமானார். அவர், தான் திருச்சி கோர்ட்டில் பணிபுரிந்து வருவதாகவும், கோர்ட்டில் உதவி தட்டச்சர் பணியிடம் காலியாக இருப்பதாகவும், அந்த வேலை வாங்கித்தர வேண்டும் என்றால் ரூ.35 ஆயிரம் தர வேண்டும் என்றும் கேட்டார். இதனை நம்பிய அழகேசன் ரூ.35 ஆயிரத்தை திபில்யாவிடம் கொடுத்தார். ஆனால் அவர் கூறியபடி வேலை வாங்கி தரவில்லை. இது குறித்து கேட்டபோது, அவருக்கு போலி பணி ஆணையை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அழகேசன் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திபில்யாவை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து நடத்திய விசாரணையில் திபில்யா, திருச்சி அல்லித்துறையை சேர்ந்த பிரசாந்த்ராஜ் என்ற பட்டதாரி வாலிபரிடம் ரூ.96 ஆயிரமும், குளித்தலை நெய்தலூரை சேர்ந்த அஜித் என்ற வாலிபரிடம் ரூ.76 ஆயிரமும் என கோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக பெற்றதும், அவர்களிடம் போலி பணி நியமன ஆணை வழங்கி மோசடி செய்ததும் தெரியவந்தது. இதன்படி 3 பட்டதாரி வாலிபர்களிடம் மொத்தம் ரூ.2 லட்சத்து 7 ஆயிரம் வரை மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் திபில்யா, திருச்சி கோர்ட்டில் சில மாதங்கள் தினக்கூலி அடிப்படையில் உதவியாளராக வேலை பார்த்து வந்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.