கணவரை கொன்ற பெண் கைது
கணவரை கொன்ற பெண் கைது செய்யப்பட்டார்.
மேலூர்
மேலூர் அருகே உள்ள டி.மாணிக்கம்பட்டியை சேர்ந்தவர் கண்ணன்(வயது 55). விவசாயி. இவரது மனைவி மாரியம்மாள் (47). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இருவருக்குமே திருமணம் ஆகிவிட்டது. மகள் வெளியூரில் கணவருடன் உள்ளார். மகன் சங்கர் (26) மனைவியுடன் அவரது தாய் தந்தையாருடன் ஒன்றாக வசிக்கிறார். கண்ணனுக்கும், மாரியம்மாளுக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் கண்ணன் காயமடைந்துள்ளார். அவரை மாரியம்மாள் மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி கண்ணன் இறந்தார். இது குறித்து மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் மாரியம்மாள் அவரது கணவர் கண்ணனை தாக்கியதாகவும், இதனால் அவர் இறந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மாரியம்மாளை போலீசார் கைது செய்தனர்.