கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற பெண் கைது
திருப்பனந்தாள் அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரின் கழுத்தை நெரித்துக்கொன்ற பெண், உடலை பாலத்தின் அடியில் புதைத்து வைத்தார். இந்த கொடூர செயலில் ஈடுபட்ட அந்த பெண்ணையும், அவரது கள்ளக்காதலனையும் போலீசார் கைது செய்தனர்.
திருப்பனந்தாள்:
திருப்பனந்தாள் அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரின் கழுத்தை நெரித்துக்கொன்ற பெண், உடலை பாலத்தின் அடியில் புதைத்து வைத்தார். இந்த கொடூர செயலில் ஈடுபட்ட அந்த பெண்ணையும், அவரது கள்ளக்காதலனையும் போலீசார் கைது செய்தனர்.
கருத்து வேறுபாடு
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருப்பனந்தாள் அருகே உள்ள கீழ்மாந்தூர் பழைய தெருவை சேர்ந்தவர் உத்திராபதி. இவரது மகன் பாரதி(வயது 35) இவர், சென்னையில் டீக்கடையில் வேலை செய்து வந்தார்.
இவரது மனைவி திவ்யா(27). கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களது திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 7 வயதில் மகனும், 5 வயதில் மகளும் உள்ளனர். இந்த நிலையில் பாரதிக்கும், அவரது மனைவி திவ்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
போலீசில் புகார்
இந்த நிலையில் தனது கிராமத்தில் நடந்த தீமிதி திருவிழாவிற்காக கடந்த மாதம் ஊருக்கு வந்த பாரதி மீண்டும் சென்னைக்கு செல்லாமல் வீட்டிலேயே தங்கி விட்டார்.
கடந்த மாதம் 24-ந் தேதியில் இருந்து வீட்டில் இருந்த பாரதியை காணவில்லை என அவரது உறவினர் செல்வமணி, திருப்பனந்தாள் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சர்மிளா வழக்குப்பதிவு செய்து பாரதியை தேடி வந்தார்.
மனைவியிடம் விசாரணை
இந்த நிலையில் திவ்யாவின் நடவடிக்கைகளில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார், திவ்யாவை பிடித்து விசாரணை நடத்தினர். அவரிடம் விசாரணை நடத்தியபோது முதலில் தனது கணவர் குறித்து தனக்கு எதுவுமே தெரியாது என்று திவ்யா கூறினார்.
ஆனாலும் போலீசார் தங்களுக்கே உரிய பாணியில் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது திவ்யா போலீசாரிடம் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்றதாக கூறினார். போலீசாரிடம் அவர் கூறிய திடுக்கிடும் தகவல்கள் வருமாறு:-
கள்ளக்காதல்
எனக்கும், எனது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அவர் சென்னையில் வேலை பார்த்து வந்தாலும் போனில் பேசும்போது எல்லாம் என்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவார். இந்த நிலையில் கீழ்மாந்தூர் ஆர்.ஜே. நகரை சேர்ந்த டேவிட் என்கிற சதீஷ்குமார்(38) என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் எங்களுக்கிடையே கள்ளக்காதலாக மாறியது. நாங்கள் இருவரும் தொடர்ந்து பேசி, பழகி வந்தோம். கடந்த மாதம் கோவில் திருவிழாவுக்காக எனது கணவர் பாரதி ஊருக்கு வந்தார்.
கழுத்தை நெரித்து கொன்றோம்
வழக்கம்போல் எங்களுக்கு இடையே வாக்குவாதம், தகராறு ஏற்பட்டது. இதனால் பாரதியை கொலை செய்ய முடிவு செய்தேன். இதனையடுத்து எனது திட்டத்தை சதீஷ்குமாரிடம் தெரிவித்தேன். அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்தார். இதனையடுத்து இருவரும் சேர்ந்து இந்த திட்டத்தை அரங்கேற்ற முடிவு செய்தோம்.
சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்த பாரதியை நானும், சதீஷ்குமாரும் சேர்ந்து அடித்து கழுத்தை நெரித்து கொன்றோம். பின்னர் அவரது உடலை யாருக்கும் தெரியாமல் புதைத்து விடுவது என்று முடிவு செய்தோம்.
பாலத்தின் அடியில் உடலை புதைத்தோம்
இதனையடுத்து பாரதியின் உடலை ஒரு சரக்கு வேனில் ஏற்றி திருப்பனந்தாள் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பட்டம் குறுக்கு ரோடு மேலே உள்ள பாலத்தின் அடியில் புதைத்தோம். பின்னர் என்மீது யாருக்கும் சந்தேகம் எதுவும் வராமல் இருக்க அனைவரிடமும் சகஜமாக பேசி வந்தேன்.
அப்படியிருந்தும் எனது நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த போலீசார் என்னை விசாரித்து கைது செய்தனர்.
இவ்வாறு திவ்யா போலீசாரிடம் தெரிவித்தார்.
இதனையடுத்து திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர் சித்திக் மற்றும் போலீசார், பாரதியின் உடல் புதைக்கப்பட்ட இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.
கள்ளக்காதலனுடன், பெண் கைது
இதனையடுத்து திருப்பனந்தாள் போலீசார், கணவரை கொன்ற திவ்யா மற்றும் அவரது கள்ளக்காதலன் சதீஷ்குமார் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான சதீஷ்குமார் டிப்ளமோ படித்து உள்ளார்.
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை மனைவியே கொன்று புதைத்த சம்பவம் அந்த பகுதியில் ெபரும் பரபரப்பை ஏற்படுத்தியது.