போலி மருத்துவ சான்றிதழ் கொடுத்து மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெற்ற பெண் கைது


போலி மருத்துவ சான்றிதழ் கொடுத்து மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெற்ற பெண் கைது
x

போலி மருத்துவ சான்றிதழ் கொடுத்து மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெற்ற பெண் கைது செய்யப்பட்டார்.

வேலூர்

வேலூர்

போலி மருத்துவ சான்றிதழ் கொடுத்து மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெற்ற பெண் கைது செய்யப்பட்டார். இதில், தொடர்புடைய இடைத்தரர்களை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகிறார்கள்.

போலி மருத்துவ சான்றிதழ்

வேலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன் கடந்த ஏப்ரல் மாதம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில், மாற்றுத்திறனாளிகள் அல்லாத நபர்கள் மற்றும் அரசு நிர்ணயித்ததை விட குறைவான ஊனத்தின் தன்மை கொண்ட சிலர் போலி மருத்துவ சான்றிதழ் கொடுத்து மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெற்றுள்ளனர். அந்த நபர்கள் மீதும் போலி மருத்துவ சான்றிதழ் வாங்கி கொடுத்த இடைத்தரர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். மேலும் அதனுடன் போலி மருத்துவ சான்றிதழ் கொடுத்து அடையாள அட்டை பெற்ற சிலரின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட்டிருந்தார்.

இதுதொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பூபதிராஜா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் அளித்த பெயர் பட்டியலில் உள்ள குடியாத்தம் தாலுகா லட்சுமணாபுரத்தை சேர்ந்த நவநீதம் (வயது 38) என்ற பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர்.

பெண் கைது

அதில், அவர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஷூ நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதும், கடந்தாண்டு 2 பேர் அவரை அணுகி ரூ.3,500 கொடுத்தால் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெற்று தருவதாகவும், அதன் மூலம் மாதாந்திர உதவித்தொகை, இலவச பஸ் பயணம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் கிடைக்கும் என்று கூறி உள்ளனர். அதையடுத்து நவநீதம், அவர்களிடம் பணம் கொடுத்ததும், சில நாட்களில் 2 பேரும் மருத்துவ சான்றிதழ் அளித்ததாகவும், அதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெற்றதும் தெரிய வந்தது.

இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய இடைத்தரர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இதுகுறித்து போலீசார் கூறுகையில், போலி மருத்துவ சான்றிதழ் அளித்து மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பலர் பெற்றுள்ளனர். இதற்கு இடைத்தரர்கள், அரசு அலுவலர்கள் சிலர் உடந்தையாக இருந்துள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் விரைவில் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனர்.


Related Tags :
Next Story