ஓடும் பஸ்சில் நகை திருட முயன்ற பெண் கைது
தக்கலை அருகே ஓடும் பஸ்சில் நகை திருட முயன்ற பெண் கைது
தக்கலை,
தக்கலை அருகே உள்ள மூலச்சல், புளியம்புற திட்டுவிளையை சேர்ந்தவர் தோமதாஸ். இவரது மனைவி ரெஜினா (வயது52). இவர் நேற்று காலையில் கருங்கலில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று 4½ பவுன் நகையை கடன் வாங்கி விட்டு அதை அடகு வைப்பதற்காக மார்த்தாண்டம் வழியாக தக்கலை நோக்கி அரசு பஸ்சில் வந்து கொண்டிருந்தார். நகையை தனது கைப்பையில் வைத்திருந்தார். பஸ் அழகியமண்டபம் பகுதியில் வந்த போது அருகில் நின்ற பெண், நகை இருந்த கைப்பையை திருட முயன்றார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ரெஜினா சத்தம் போட்டார். உடனே, சக பயணிகள் சேர்ந்து அந்த பெண்ணை சுற்றி வளைத்து பிடித்து தக்கலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ராஜூ என்பவரின் மனைவி காயத்ரி (35) என்பதும், இதுபோல் குமரி மாவட்டத்தில் பல இடங்களில் கைவரிசை காட்டியதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து பத்மநாபபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.