மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் கைது
கரூர் அருகே மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் கைது செய்யப்பட்டார்.
மூதாட்டி கொலை
கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், பள்ளிக்கவுண்டர் தெற்கு பகுதியை சேர்ந்தவர் முத்துச்சாமி. இவரது மனைவி கன்னியம்மாள் (வயது 65). இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் கன்னியம்மாள் தனது தங்கை வெள்ளையம்மாளை, முத்துசாமிக்கு 2-வது திருமணம் செய்து கொடுத்துள்ளார். இதில் இவர்களுக்கு 2 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்தநிலையில் முத்துச்சாமி உடல் நலக்குறைவால் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.இதனால் வயது முதிர்வின் காரணமாக கன்னியம்மாள் தங்கை வெள்ளையம்மாளுடன் அவரது மகன் விஸ்வநாதனுடன் அதே பகுதியில் உள்ள தங்களுக்கு சொந்தமான தோட்டத்து வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 19-ந்தேதி தோட்டத்தில் கழுத்து அறுக்கப்பட்டு, முகம் சிதைந்த நிலையில் கன்னியம்மாள் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.இந்த கொலை குறித்து சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து, கொலையாளியை தேடி வந்தனர்.
வங்கியில் அடமானம்
இதையடுத்து சந்தேகத்தின்பேரில், கன்னியம்மாளின் வீட்டின் அருகே வசித்து வரும் கண்ணன் என்பவரது மனைவி முருகாயி (39) என்பவரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், கன்னியமாளிடம் நான் ஒரு சுபநிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் எனக்கூறி அவர் அணிந்திருந்த தங்கசங்கிலியை வாங்கினேன்.
பின்னர் அந்த சங்கிலியை வங்கியில் அடமானம் வைத்து விட்டேன். இதையடுத்து கன்னியம்மாள் என்னிடம் பலமுறை தங்கசங்கிலி குறித்து கேட்டும், எனக்கு பணம் வசதி இல்லாததால் என்னால் தங்கசங்கலியை மீட்டு கொடுக்க முடியவில்லை.
பெண் கைது
இதனால் ஆத்திரமடைந்த நான் கன்னியம்மாளை கொலை செய்ய முடிவு செய்தேன். அதன்பின்னர் கடந்த 19-ந்தேதி தரிசு காட்டில் தனியாக இருந்த கன்னியம்மாளை அரிவாளால் கழுத்தை அறுத்தும், கல்லால் முகத்தில் அடித்தும் கொலை செய்தேன் என்று கூறினார்.
இதையடுத்து முருகாயி கூறியதை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். பின்னர் முருகாயி மீது வழக்குப்பதிந்து, அவரை கைது செய்து திருச்சி மகளிர் சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட முருகாயிக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளது குறிப்பிடத்தக்கது.