ரெயிலில் இருந்து தவறி விழுந்து பெண் கால்முறிவு
ராமநாதபுரத்தில் ரெயிலில் இருந்து கீழே விழுந்ததால் பெண்ணின் கால் முறிந்தது.
ராமேசுவரம்,
சென்னையில் இருந்து ராமேசுவரத்திற்கு நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு புறப்பட்ட சேது எக்ஸ்பிரஸ் ரெயிலில் விழுப்புரத்தில் இருந்து கேசவன் (வயது 51), இவரது மனைவி தேவகி (48), மகள் பவித்ரா (18) ஆகிய 3 பேரும் ராமேசுவரம் கோவிலுக்கு வருவதற்காக ரெயிலில் ஏறி உள்ளனர். சேது எக்ஸ்பிரஸ் ரெயில் ராமநாதபுரம் ரெயில் நிலையத்தில் நின்றுள்ளது. ராமநாதபுரத்தில் இறங்க வேண்டிய அந்த 3 பேரும் அசந்து தூங்கிவிட்டனர். திடீரென கண்விழித்து பார்த்தபோது அந்த ரெயில் ராமநாதபுரத்தில் நிற்பதை பார்த்த இவர்கள் உடனடியாக ரெயிலை விட்டு இறங்க முற்பட்டனர். இதில் கேசவன் ரெயிலை விட்டு இறங்கவே அடுத்து அவரது மனைவி தேவகி இறங்க முயன்ற போது ரெயில் புறப்பட்டது. இதனால் அவர் கால் தவறி ரெயில் தண்டவாளத்தில் விழுந்துவிட்டார். இதில் அவரது வலது காலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டு விட்டது. ரெயில் புறப்பட அவரது மகள் இறங்க முடியவில்லை. தொடர்ந்து தண்டவாளத்தில் கால் முறிவு ஏற்பட்டு அடிபட்டு கிடந்த அந்த பெண்ணை ரெயில்வே போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
ரெயிலில் இறங்க முடியாமல் சென்ற இவர்களது மகள் பவித்ரா மண்டபத்தில் இறங்கினார். ரெயில்வே போலீசார் அந்த பெண்ணை அழைத்து வந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அதிர்ஷ்டவசமாக ராமநாதபுரம் ெரயில் நிலையத்தில் தவறி விழுந்த வேலூர் அருகே பரூவூரை சேர்ந்த தேவகி காலில் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இச்சம்பவம் குறித்து ராமேசுவரம் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.