அடகு வைத்த நகையை கணவர் மீட்டு தராததால் பெண் தற்கொலை


அடகு வைத்த நகையை கணவர் மீட்டு தராததால் பெண் தற்கொலை
x
தினத்தந்தி 15 May 2023 12:15 AM IST (Updated: 15 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

களியக்ககாவிளை அருகே அடகு வைத்த நகையை கணவர் மீட்டு தராததால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கன்னியாகுமரி

களியக்காவிளை:

களியக்ககாவிளை அருகே அடகு வைத்த நகையை கணவர் மீட்டு தராததால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

நகையை அடகு வைத்த கணவர்

களியக்காவிளை அருகே உள்ள குளப்புறம் தளச்சான்விளையை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 42). இவர் சொந்தமாக 2 டெம்போக்களை ஓட்டி தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி சுஜிதா (35). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

பிரகாசுக்கு டெம்போ சரிவர ஓடாததால் கடன் வாங்கி குடும்பத்தை நடத்தியுள்ளார். பிறகு கடனில் இருந்து மீண்டு வருவதற்காக தனது மனைவி சுஜிதாவின் நகைகளை ரூ.5 லட்சத்து 50 ஆயிரத்துக்கு அடகு வைத்துள்ளார். அதே சமயத்தில் நாட்கள் கடந்தும் அந்த நகையை பிரகாஷ் மீட்டு கொடுக்கவில்லை. இதனால் சுஜிதா மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார்.

பெண் தற்கொலை

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சுஜிதா திடீரென படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுதொடர்பாக பிரகாஷ் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடகு வைத்த நகையை கணவர் மீட்டு தராததால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story