விஷம் குடித்து பெண் தற்கொலை
திருக்கோவிலூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது அண்ணன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே சிவனார்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி குஷ்பு (வயது 30). தொழிலாளர்களான இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் ஆறுமுகம் தனது மனைவியிடம், மதுகுடிப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த குஷ்பு சம்பவத்தன்று விஷத்தை எடுத்து குடித்ததாக தெரிகிறது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இருப்பினும் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த தகவலின் பேரில் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து குஷ்புவின் அண்ணன் ராஜதுரை திருக்கோவிலூர் போலீசில் புகார் அளித்தார். அதில் எனது தங்கையின் சாவில் மர்மம் உள்ளது. எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 2 ஆண்டுகளில் குஷ்பு இறந்துள்ளதால் அவரது சாவு குறித்து திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.