வரதட்சணை கொடுமையால் தூக்குப்போட்டு பெண் தற்கொலை
திண்டிவனத்தில் வரதட்சணை கொடுமையால் தூக்குப்போட்டு பெண் தற்கொலை கணவர் கைது
திண்டிவனம்
திண்டிவனம் அருகே வைரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அசோக்(வயது 28). கொத்தனாரான இவருக்கும், பெரமண்டூர் பகுதியை சேர்ந்த ஷர்மிளா(23) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. குழந்தை இல்லை. இந்த நிலையில் சம்பவத்தன்று ஷர்மிளா வீட்டின் ஜன்னலில் வேட்டியால் தூக்குப்போட்டுக் கொண்டார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் ஷர்மிளா பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றிய தகவல் அறிந்து வந்த வெள்ளிமேடு பேட்டை போலீசார் ஷர்மிளாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக ஷர்மிளாவின் தந்தை சுப்பன் கொடுத்த புகாரின் பேரில் திண்டிவனம் சப்-கலெக்டர் மற்றும் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் அசோக்கை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் ஷர்மிளாவை தானும், தனது தந்தை மதுரை, சித்தி பார்வதி மற்றும் 17 வயது தங்கை ஆகியோர் சேர்ந்து வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாக தெரிவித்தார். இதை அடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக அசோக் மீது வழக்குப்பதிவுசெய்த போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மதுரை உள்பட 3 பேரையும் போலீசார் தேடி வருகிறாா்கள்.