சேலத்தில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை-உதவி கலெக்டர் விசாரணை


சேலத்தில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை-உதவி கலெக்டர் விசாரணை
x

சேலத்தில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

சேலம்

காதல் திருமணம்

சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் லிங்கேஸ்வரன். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரும் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த திவ்யபாரதி (வயது 19) என்பவரும் முகநூல் மூலம் பழகி காதலித்து வந்தனர். மேலும் அவர்கள் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு கடந்த ஆண்டு இரட்டை ஆண் குழந்தை பிறந்தது.

நேற்று காலை வழக்கம்போல் வேலைக்கு சென்ற லிங்கேஸ்வரன் தனது மனைவியின் செல்போன் எண்ணுக்கு பலமுறை தொடர்பு கொண்டார். ஆனால் அவர் செல்போனை எடுக்காததால் சந்தேகமடைந்த லிங்கேஸ்வரன் வீட்டுக்கு திரும்ப வந்தார். அப்போது வீட்டில் இருந்த ஒரு அறையில் திவ்யபாரதி தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார்.

தற்கொலை

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த லிங்கேஸ்வரன் மற்றும் அவரது உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று திவ்யபாரதியை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் திவ்யபாரதி வரும் வழியிலேயே இறந்து விட்டது தெரியவந்தது. இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து தகவல் கிடைத்ததும் அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அவருடைய வீட்டில் இருந்து திவ்யபாரதி தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அதில் தன்னுடைய குழந்தைகளை சரியாக பராமரிக்க முடியவில்லை என்று எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக உதவி கலெக்டர் விஷ்ணு வர்த்தினியும் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story