திண்டிவனம் அருகேகார் மோதி பெண் சாவுமேல்மருவத்தூருக்கு பாதயாத்திரை சென்ற போது பரிதாபம்
திண்டிவனம் அருகே மேல்மருவத்தூருக்கு பாதயாத்திரை சென்ற பெண் காா் மோதி உயிரிழிந்தாா்.
திண்டிவனம்,
திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை நகர் பகுதியை சேர்ந்தவர் பாண்டு. இவரது மனைவி உஷா (வயது 41). இவர் திருவண்ணாமலை நகராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக உள்ளார். இவர் மற்றும் அதேபகுதியை சேர்ந்த சரளா (36), சீனு (49) உள்பட 20 பேர் திருவண்ணாமலையில் இருந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர்.
அதன்படி இவர்கள் நேற்று முன்தினம் இரவு திண்டிவனம் அடுத்த கொணக்கம்பட்டு மீனூர் என்கிற இடத்தில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார்கள்.
அப்போது, திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த கார் உஷா மீது மோதியது. இதில் படுகாயமடைந்த உஷா சம்பவ இடத்திலேயே இறந்து போனார். அவருடன் வந்த சரளா பலத்த காயமடைந்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் ரோசணை போலீசார் விசாரித்து வருகின்றனர்.