லாரி மோதி பெண் சாவு
திருவையாறு அருகே கணவர் கண்எதிரே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதியதில் பெண் பரிதாபமாக இறந்தார்.
திருவையாறு அருகே கணவர் கண்எதிரே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதியதில் பெண் பரிதாபமாக இறந்தார்.
கணவன்-மனைவி
திருவையாறை அடுத்த திருப்பழனம் மேலத்தெருவை சேர்ந்தவர் நீதிபதி(வயது60). இவரது மனைவி ஷீலா (45). இவர்களுக்கு பிரசாந்த் (29), பிரவீன் (20), ஜெகன் (17) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். நீதிபதி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழகத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். நேற்று நீதிபதியும், ஷீலாவும் மோட்டார் சைக்கிளில் வீட்டிலிருந்து புறப்பட்டு திங்களூர் மெயின்ரோட்டில் உள்ள ஒரு திருமணமண்டபத்தில் நடந்த திருமணவரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். பின்னர் மோட்டார்சைக்கிளில் திருவையாறு நோக்கி வந்துகொண்டிருந்தனர்.
அப்போது காரைக்காலிலிருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டுவந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
லாரி மோதி பெண் சாவு
இதில் கீழே விழுந்த ஷீலா மீது லாரி ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே கணவர் கண்எதிரே அவர் பரிதாபமாக இறந்தார். இதில் நீதிபதி லேசான காயம் அடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவையாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஷீலாவின் உடலை கைப்பற்றி திருவையாறு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து நீதிபதி கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வனிதா, சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் கண்எதிரே மனைவி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.