டயர் வெடித்ததால் தடுப்பு சுவரில் கார் மோதி பெண் பலி
டயர் வெடித்ததால் தடுப்பு சுவரில் கார் மோதியதில் பெண் பலியானார். படுகாயம் அடைந்த 5 பேருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
கார் டயர் வெடித்தது
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் ரகுபதி (வயது 55). இவரது மனைவி பானுமதி (45). இவருடைய மகன் சேமன் (24). இவர்கள் தற்போது சென்னையில் வசித்து வருகிறார்கள். இந்தநிலையில் ரகுபதி தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களான துரைசாமி (60), சுலோச்சனா (54), ஜனனி (24) ஆகியோருடன் காரில் பழனி சென்றுவிட்டு மீண்டும் சென்னைக்கு சென்று கொண்டிருந்தனர். காரை ரகுபதி ஓட்டி சென்றார்.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது காரின் முன்பக்க டயர் வெடித்தது.
பெண் பலி; 5 பேருக்கு தீவிர சிகிச்சை
இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக சென்று சாலையின் நடுேவ இருந்த தடுப்பு சுவரில் மோதியது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. இதில், படுகாயம் அடைந்த பானுமதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் படுகாயம் அடைந்த 5 பேரையும் மீட்டு பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் பானுமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.