வயலில் கார் கவிழ்ந்து பெண் பலி
செங்கோட்டை அருகே வயலில் கார் கவிழ்ந்த விபத்தில் பெண் பலியானார்.
செங்கோட்டை:
செங்கோட்டை அருகே உள்ள அச்சன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து பாண்டியன் (வயது 61). இவருடைய மனைவி ஆனந்த செல்வி (51). இவர்கள் இருவரும் தங்களுடைய மருமகனை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு சென்று விட்டு ஊருக்கு காரில் திரும்பி வந்து கொண்டு இருந்தனர். பேச்சிமுத்து பாண்டியன் காரை ஓட்டினார்.
நேற்று அதிகாலை 4.20 மணியளவில் செங்கோட்டை அருகே உள்ள புளியரை அருகில் இருக்கும் இசக்கியம்மன் கோவில் பக்கம் வளைவில் கார் திரும்பியபோது திடீரென மாடு ஒன்று குறுக்கே பாய்ந்தது. இதனால் மாடு மீது மோதாமல் இருப்பதற்காக பேச்சிமுத்து பாண்டியன் காரை லேசாக திருப்பினார். அப்போது கார் நிலைதடுமாறி சுமார் 10 அடி ஆழமுள்ள பள்ளத்தில் உள்ள வயலுக்குள் பாய்ந்து கவிழ்ந்தது. இதில் காரின் உள்ளே இடதுபுறம் இருந்த ஆனந்த செல்வி படுகாயம் அடைந்தார்.
இந்த விபத்து குறித்த தகவல் அறிந்ததும் புளியரை போலீசார் மற்றும் செங்கோட்டை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆனந்த செல்வியை மீட்டு செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்தபோது, ஆனந்த செல்வி ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்தார்.
இந்த விபத்தில் பேச்சிமுத்து பாண்டியன் லேசான காயம் அடைந்தார். விபத்து குறித்து புளியரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஞ்சய்காந்தி வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் சியாம் சுந்தர் விசாரணை நடத்தி வருகிறார். மாடு குறுக்கே பாய்ந்ததால் கார் கவிழ்ந்த விபத்தில் பெண் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.