மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு
திண்டிவனம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு சேலை முந்தானை சக்கரத்தில் சிக்கியதால் விபரீதம்
திண்டிவனம்
திண்டிவனம் அருகே உள்ள நல்லாத்தூரை அடுத்த கோனேரிகுப்பம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் வெள்ளை மனைவி கற்பகம்(வயது 57). திண்டிவனத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஊழியராக வேலை பார்த்து வந்த இவர் தினமும் பள்ளி வேனில் சென்று குழந்தைகளை ஏற்றி இறக்கிவிட்டு வருவது வழக்கம். நேற்று முன்தினம் மாலை வகுப்பு முடிந்ததும் வேனில் சென்று குழந்தைகளை இறக்கி விட்டார். பின்னர் வேன் டிரைவர் பள்ளிபாக்கத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் தானேஷ்வரன்(26) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். பாதிரி கிராமம் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக கற்பகத்தின் சேலை முந்தானை மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் சிக்கிக்கொண்டது. இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.