டிராக்டரில் இருந்து தவறி விழுந்த பெண் பலி
டிராக்டரில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்தார்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியை சேர்ந்தவர் சிவராமன். இவரது மனைவி வேலம்மாள் (வயது 48). இவர் விவசாய பணி மேற்கொள்வதற்காக உர மூடைகளை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு கோபாலபுரத்தில் உள்ள காட்டிற்கு சென்று கொண்டிருந்தார். டிராக்டரை பாளையம்பட்டியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். வேலம்மாள் டிராக்டரின் பின்னால் கலப்பையின் மேல் பகுதியில் உரமூடைகளின் மேல் அமர்ந்து சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாளையம்பட்டி மின்வாரிய அலுவலகம் அருகே டிராக்டர் சென்ற போது திடீரென வேலம்மாள் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வேலம்மாள் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து டிராக்டர் டிரைவர் சீனிவாசனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.