கழிவுநீர் தொட்டி குழிக்குள் விழுந்த பெண் சாவு; 2 பேர் காயம்


கழிவுநீர் தொட்டி குழிக்குள் விழுந்த பெண் சாவு; 2 பேர் காயம்
x
தினத்தந்தி 29 Dec 2022 12:15 AM IST (Updated: 29 Dec 2022 8:31 PM IST)
t-max-icont-min-icon

திருவட்டார் அருகே சமுதாய நலக்கூடத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கழிவுநீர் தொட்டி திடீரென உடைந்ததால் அந்த குழிக்குள் ஒரு பெண் விழுந்து பலியானார். 2 பேர் காயம் அடைந்தனர்.

கன்னியாகுமரி

திருவட்டார்:

திருவட்டார் அருகே சமுதாய நலக்கூடத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கழிவுநீர் தொட்டி திடீரென உடைந்ததால் அந்த குழிக்குள் ஒரு பெண் விழுந்து பலியானார். 2 பேர் காயம் அடைந்தனர்.

கழிவுநீர் தொட்டி உடைந்தது

திருவட்டாரை அடுத்த முதலார் உச்சகரைவிளையை சேர்ந்தவர் மோகன் தாஸ் (வயது 52), ரப்பர் பால்வெட்டும் தொழிலாளி. இவருடைய மனைவி சுசீஜா (51). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

மோகன் தாசும், சுசீஜாவும் நேற்று முன்தினம் மாலையில் ஒட்டலிவிளையில் உள்ள ஒரு சமூக நலக்கூடத்தில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். அங்கு உணவருந்தி விட்டு கைகழுவச் சென்றனர். கைகழுவும் இடத்தின் கீழ்பகுதியில் கழிவுநீர் தொட்டி உள்ளது.

இந்த தொட்டியின் மேல்தளத்தில் நின்று சுசீஜாவும், அதே பகுதியை சேர்ந்த டென்னிஸ் மனைவி சில்ஜா, முருகன் மனைவி நிர்மலா ஆகியோர் கை கழுவி கொண்டிருந்தனர். அப்ேபாது திடீரென மேல்தளம் உடைந்தது.

குழிக்குள் விழுந்த பெண் சாவு

இதனை சற்றும் எதிர்பார்க்காத 3 பேரும் அடுத்தடுத்து கழிவுநீர் தொட்டியின் குழிக்குள் விழுந்தனர். இதனை அருகில் நின்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். எனினும் சுதாரித்துக் கொண்டு மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் சில்ஜாவையும், நிர்மலாவையும் லேசான காயத்துடன் காப்பாற்றினர். ஆனால் சுசீஜாவின் தலையில் கல்விழுந்து அழுத்தியதில் அவரை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. பின்னர் ஒருவழியாக நீண்ட போராட்டத்திற்கு பிறகு சுசீஜாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தக்கலை அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சுசீஜா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இதுகுறித்து சுசீஜாவின் கணவர் மோகன்தாஸ் திருவட்டார் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாங்க பெருமாள் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்காதர் விசாரணை நடத்தினர். கழிவுநீர் தொட்டி குழிக்குள் பெண் விழுந்து பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


கழிவுநீர் தொட்டி குழிக்குள் விழுந்தவர்களை மீட்க வந்த தீயணைப்பு கால்வாய்க்குள் பாய்ந்தது. இது தொடர்பாக மதுபோதையில் இருந்த டிரைவர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

மீட்பு வாகனம் விபத்தில் சிக்கியது

சமூக நலக்கூடத்தில் உள்ள கழிவுநீர் தொட்டி குழிக்குள் பெண்கள் விழுந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் குலசேகரம் தீயணைப்பு வீரர்கள் மீட்பு வாகனம் மூலம் இரவு 8 மணிக்கு ஒட்டலிவிளை நோக்கி புறப்பட்டனர். அப்போது தீயணைப்பு வாகனத்தை குலசேகரம் தீயணைப்பு மீட்புப்பணி நிலைய ஓட்டுனர் சுஜின் என்பவர் ஓட்டியுள்ளார். இவரை தவிர 5 பேரும் வாகனத்தில் இருந்துள்ளனர்.

மாத்தூர் தொட்டிப்பாலம் நுழைவுவாயில் அருகில் வந்தபோது திடீரென தீயணைப்பு வாகனம் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள சிற்றாறு பட்டணம் கால்வாய்க்குள் பாய்ந்தது.

உடனே சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து வாகனத்தில் சிக்கி இருந்த தீயணைப்பு வீரர்களை மீட்டனர். இதில் லேசான காயத்துடன் சுஜின் தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மற்றவர்களுக்கு குலசேகரம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் இரவோடு இரவாக பொக்லைன் எந்திரம் மூலமாக தீயணைப்பு வாகனம் கால்வாயில் இருந்து கரைக்கு கொண்டு வரப்பட்டது. கால்வாயில் தண்ணீர் குறைவாக சென்றதால் தீயணைப்பு வீரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

டிரைவர் மீது புகார்

இந்தநிலையில் குலசேகரம் தீயணைப்பு மீட்பு பணி நிலைய தலைமை முன்னணி தீயணைப்பாளர் சதீஷ்குமார் திருவட்டார் போலீசில் மதுபோதையில் தீயணைப்பு நிலைய வாகனத்தை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய தீயணைப்பு நிலைய டிரைவர் சுஜின் மீது நடவடிக்கை எடுக்கக்கேட்டு புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாங்கபெருமாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கழிவுநீர் தொட்டி உடைந்து உள்ளே விழுந்த பெண் இறந்த சம்பவமும், விழுந்தவரை மீட்க வந்த தீயணைப்பு வாகனம் கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவமும் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story