சேலையில் தீப்பிடித்து பெண் சாவு
சேலையில் தீப்பிடித்து பெண் சாவு
அய்யம்பேட்டை அருகே அகல் விளக்கின் மீது மண்எண்ணெய் கொட்டியதில் சேலையில் தீப்பிடித்து பெண் பரிதாபமாக இறந்தார். காப்பாற்ற முயன்ற கணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தீப விளக்குகள்
அய்யம்பேட்டை அருகே கீழவழுத்தூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சுந்தரம். இவர் உணவகம் நடத்தி வருகிறார். இவரது மனைவி ராணி (வயது 50). இவர் கடந்த 6-ந்தேதி கார்த்திகை திருநாளையொட்டி தனது வீட்டில் தீப விளக்குகள் ஏற்றியுள்ளார். இதையடுத்து அடுப்பு பற்ற வைப்பதற்காக அலமாரியின் மேலிருந்து மண்எண்ணெய் கேனை எடுத்துள்ளார். அப்போது மண்எண்ணெய் கேன் கை தவறி கீழே விழுந்தது.
சேலையில் தீப்பிடித்தது
இதில் இருந்த மண்எண்ணெய் எரிந்து கொண்டிருந்த அகல் விளக்குகளின் மீது பட்டு ராணியின் சேலையில் தீப்பிடித்து அவரது உடலில் பரவியது. இதனை பார்த்த சுந்தரம் மனைவி மீது பரவிய தீயை அணைக்க முயன்றுள்ளார். அப்போது சுந்தரத்தின் உடலிலும் தீக்காயம் ஏற்பட்டது.
தீவிர சிகிச்சை
இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ராணி, சுந்தரம் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராணி நேற்று இறந்தார். சுந்தரத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா, சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.