ஸ்டவ் அடுப்பை பற்ற வைத்தபோது தீக்காயம் அடைந்த பெண் சாவு
புகழூர் அருகே ஸ்டவ் அடுப்பை பற்ற வைத்தபோது தீக்காயம் அடைந்த பெண் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கரூர் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
தீக்காயம் அடைந்த பெண்
கரூர் மாவட்டம், புகழூர் ரெயில்வே நிலையம் அருகே உள்ள புதுகுறுக்கு பாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்து மூர்த்தி (வயது 35). இவரது மனைவி நாகஜோதி (31). இந்த தம்பதிக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. மீராதேவி (6) என்ற மகள் உள்ளார். இந்நிலையில் நாகஜோதி கடந்த 18-ந்தேதி இரவு தனது வீட்டில் சமைப்பதற்காக பம்பு ஸ்டவ்வை பற்ற வைத்தபோது தீ பிடிக்கவில்லை. இதனால் மெழுகுவர்த்தி மூலம் ஸ்டவ் அடுப்பை பற்ற வைக்க அருகே கொண்டு சென்றபோது ஸ்டவ்வில் இருந்த மண்எண்ணெய்யில் தீப்பற்றி நாகஜோதி அணிந்திருந்த நைட்டியில் பட்டு மள மளவென எரிந்தது.
சாவு
இதனால் பலத்த தீக்காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் கடந்த 20-ந்தேதி மேல்சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாகஜோதி பரிதாபமாக இறந்தார்.
கோட்டாட்சியர் விசாரணை
இதுகுறித்து நாகஜோதியின் அண்ணன் முனியசாமி கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோதினி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார் நாகஜோதிக்கு திருமணமாகி 7 ஆண்டுகளே ஆவதால் கரூர் கோட்டாட்சியர் ரூபினாவும் விசாரணை நடத்தி வருகிறார்.