மொபட்டில் இருந்து தவறி விழுந்து பெண் சாவு
வேலூர் அருகே மொபட்டில் இருந்து தவறி விழுந்து பெண் பலியானார்.
வேலூரை அடுத்த அண்பூண்டி மேட்டுத்தெருவை சேர்ந்தவர் அமுதா (வயது 57). இவர் கூலி வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று காலை வேலைக்கு செல்வதற்காக அமுதா வீட்டின் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற வேலூர் வேலப்பாடியை சேர்ந்த பாபு என்பவரின் மொபட்டில் லிப்ட் கேட்டு அவர் சென்றார். அப்துல்லாபுரம் ஆதிலிங்கேஸ்வரர் கோவில் அருகே சென்றபோது அமுதா எதிர்பாராதவிதமாக மொபட்டில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை பாபு மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்சில் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அமுதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.