தூக்குப்போட்டு பெண் சாவு:தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது
தூக்குப்போட்டு பெண் இறந்த வழக்கில் தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது செய்யப்பட்டாா்.
அந்தியூர்
அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசம் குழியூர் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 37). செங்கல் சூளை தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். அவருடைய மனைவி நந்தினி (22). இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி வீட்டில் இருந்த நந்தினி, மனமுடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவருடைய தந்தை சென்னாநாயக்கர், அந்தியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் அவர் 'எனது மகள் நந்தினிக்கு அவருடைய கணவர் பழனிவேல் அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த எனது மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். எனவே பழனிவேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.
அதன்பேரில் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு அமிர்தவர்ஷினி, கோபி ஆர்.டி.ஓ. பிரியதர்ஷினி ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். இதில் பழனிவேல் தனது மனைவி நந்தினிக்கு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் மனம் உடைந்த நந்தினி தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் பழனிவேலை போலீசார் கைது செய்தனர்.