துப்பாக்கி குண்டு பாய்ந்து பெண் படுகாயம்


துப்பாக்கி குண்டு பாய்ந்து பெண் படுகாயம்
x

ஆம்பூர் அருகே நாட்டுத் துப்பாக்கி குண்டு பாய்ந்து பெண் படுகாயமடைந்தார். இது தொடர்பாக அவரது கணவர் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர்

துப்பாக்கி குண்டு பாய்ந்தது

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மாச்சம்பட்டு பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 35). இவரது மனைவி கஸ்தூரி (30). சிலம்பரசன் அதே பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் வீடு கட்டி மனைவியுடன் வசித்து வருகிறார். சிலம்பரசன் கடந்த சில நாட்களாக நாட்டுத் துப்பாக்கியை பதுக்கி வைத்து வனவிலங்குகள் மற்றும் பறவைகளை வேட்டையாடி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நாட்டுத் துப்பாக்கியை சிலம்பரசன் எடுக்கும் போது அருகில் இருந்த அவரது மனைவி கஸ்தூரியின் மீது எதிர்பாராத விதமாக குண்டு பாய்ந்தது. மார்பு பகுதியில் குண்டு பாய்ந்ததால் அவர் அலறினார். சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

கணவர் கைது

குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்த கஸ்தூரியை அவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலையில் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் உமராபாத் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி சிலம்பரசனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 2 நாட்டு துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story