தொழிலாளி தாக்கியதில் காயமடைந்த பெண் சாவு; கொலை வழக்காக மாற்றம்
வல்லநாடு அருகே தொழிலாளி தாக்கியதில் காயமடைந்த பெண் உயிரிழந்தார். இதையடுத்து அவர் மீதான அடிதடி வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் பதிவு செய்தனர்.
ஸ்ரீவைகுண்டம்:
வல்லநாடு அருகே தொழிலாளி தாக்கியதில் காயமடைந்த பெண் உயிரிழந்தார். இதையடுத்து அவர் மீதான அடிதடி வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் பதிவு செய்தனர்.
விவசாயி
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே அனந்தநம்பிகுறிச்சி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம். விவசாயி. இவருடைய மனைவி வள்ளியம்மாள் (வயது 65). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
இவர்களது பக்கத்து வீட்டில் கூலி தொழிலாளி கணேசன் (42) வசித்து வருகிறார். இவருடைய மனைவி கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்று விட்டார். இதனால் கணேசன் தனியாக வசித்து வருகிறார்.
காயமடைந்த பெண் சாவு
கடந்த 7-ந்தேதி வள்ளியம்மாளின் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த சைக்கிளை கணேசன் கையால் அங்குமிங்கும் இழுத்துள்ளார். இதனை வள்ளியம்மாள் கண்டித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த கணேசன் கையில் தூக்குவாளி, உளி போன்ற பொருட்களுடன் வைத்திருந்த துணிப்பையால் வள்ளியம்மாளின் தலையில் தாக்கினார். இதில் படுகாயமடைந்த அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவில் வள்ளியம்மாள் பரிதாபமாக இறந்தார்.
கொலை வழக்காக மாற்றம்
இதையடுத்து கணேசன் மீதான அடிதடி வழக்கை, கொலை வழக்காக மாற்றி பதிவு செய்த முறப்பநாடு போலீசார் அவரை கைது செய்தனர்.
பின்னர் அவரை ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.